ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பாலித் தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, சாங்கி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் விமானங்கள் உட்பட பாலித் தீவுக்குச் செல்லும், அங்கிருந்து புறப்படும் குறைந்தது 24 விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
ஃபுளோரஸ் தீவில் உள்ள லெவோட்டோபி லக்கி-லக்கி எரிமலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) வெடித்ததைத் தொடர்ந்து, அதன் எச்சரிக்கை நிலையை அதிகாரிகள் உச்சநிலைக்கு உயர்த்தினர்.
இதுகுறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்ஐஏ, சிங்கப்பூருக்கு வரும் இரண்டு விமானங்களும் பாலித் தீவின் டென்பசாருக்குச் செல்லும் இரண்டு விமானங்களும் புதன்கிழமை ரத்துசெய்யப்பட்டதாக தெரிவித்தது.
விமானச் சேவை ரத்து குறித்து பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களையும் தான் தொடர்புகொண்டு தெரியப்படுத்தவுள்ளதாக எஸ்ஐஏ குறிப்பிட்டது.
“நிலவரம் இன்னும் நிச்சயமற்றதாக உள்ளதால், சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே இதர எஸ்ஐஏ விமானச் சேவைகளும் பாதிக்கப்படலாம்,” என்று எஸ்ஐஏ கூறியது.
பாதிக்கப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்பட்ட சிரமத்துக்காக எஸ்ஐஏ மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
புதன்கிழமை காலை தனது ஐந்து விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டதாக ஸ்கூட் தெரிவித்தது. மூன்று விமானங்கள் சிங்கப்பூரிலிருந்து புறப்படவிருந்தன. இரண்டு விமானங்கள் லொம்போக் தீவிலிருந்தும் டென்பசாரிலிருந்தும் சாங்கி விமான நிலையத்திற்கு வரவிருந்தன.
டென்பசாரிலிருந்து சிங்கப்பூருக்கு புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புறப்படவிருந்த மற்றொரு விமானமான டிஆர்289யும் ரத்துசெய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்புகொண்டு விமானப் புறப்பாடு குறித்து மாற்றங்களை தான் தெரியப்படுத்தியுள்ளதாக ஸ்கூட் கூறியது.
பாலித் தீவுக்குப் பயணங்களுக்குத் திட்டமிட்டுள்ள பயணிகள் சிலர், விமானச் சேவைகள் எப்போது தொடரும் என்பதில் நிச்சயமற்ற சூழல் நிலவியதால் சாங்கி விமான நிலையத்தில் செய்வதறியாது காத்திருந்தனர்.
ஆஸ்திரேலியா எங்கும் உள்ள நகர்களுக்கு ஜெட்ஸ்டார் ஏஷியா, வெர்ஜின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட விமானச் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன. ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், சீனாவின் ஜுன்யாவ் ஏர்லைன்ஸ் விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டதாக பாலி அனைத்துலக விமான நிலையத்தின் இணையப்பக்கத்தில் புதன்கிழமை குறிப்பிடப்பட்டது.
பாலித் தீவுக்கு அல்லது ஜகார்த்தாவுக்குச் செல்லும் பல விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஸ்கூட், ஜெட்ஸ்டார் புதன்கிழமை காலை ரத்துசெய்ததாக சாங்கி விமான நிலைய இணையப்பக்கத்தில் சரிபார்த்தபோது தெரியவந்தது.
கருடா, இந்தோனீசியாவின் ஏர்ஏஷியா, பாத்திக்ஏர், சிட்டிலிங்க் ஏர்லைன்ஸ் ஆகிய விமானச் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. அவை திட்டமிட்டபடி ஜகார்த்தாவுக்குப் புறப்படவிருந்தன.
புதன்கிழமை காலை நிலவரப்படி, வியாழக்கிழமை (ஜூன் 19) ஜகார்த்தாவுக்கு விமானச் சேவைகளில் பாதிப்பு இல்லை எனவும் தெரிகிறது.
ஃபுளோரஸ் தீவின் லபுவான் பஜோவுக்குச் செல்லும் பல உள்நாட்டு ஏர்ஏஷியா விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன.
இந்நிலையில், 10 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பலைக் கக்கிய லெவோட்டோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் எரிமலைக் குழம்பு வழிந்தோடியது. இதனால், குறைந்தது ஒரு கிராமத்திலிருந்து மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியேற்றப்பட்டதாக இந்தோனீசியாவின் பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்தது.