இந்தோனீசியாவில் குமுறிய எரிமலை; 2.5 கி.மீ உயரத்துக்கு சாம்பல்

இந்தோனீசியாவில் குமுறிய எரிமலை; 2.5 கி.மீ உயரத்துக்கு சாம்பல்

1 mins read
5a38ae51-0323-4924-81c5-f0b1d42b01fe
வெள்ளிக்கிழமை (ஜூன் 5) குமுறிய லெவோட்டோபி லாக்கி-லாக்கி. - படம்: liputan6.com

ஜகார்த்தா: கிழக்கு இந்தோனீசியாவில் எந்நேரமும் குமுறிய நிலையில் கொந்தளித்துக்கொண்டிருந்த ஓர் எரிமலை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) பலமுறை குமுறியது.

அதிலிருந்து பெரிய அளவில் சாம்பல் வானை நோக்கிப் பாய்ச்சப்பட்டது. உள்ளூர் விமான நிலையம் ஒன்று மூடப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெவோட்டோபி லாக்கி-லாக்கி எரிமலை

ஃபுளோரஸ் தீவில் அமைந்துள்ள லெவோட்டோபி லாக்கி-லாக்கி எரிமலை வெள்ளிக்கிழமை காலை 11.15 மணிக்குக் குமுறியது. அதனால் வானை நோக்கி இரண்டரை கிலோமீட்டர் உயரத்துக்கு எரிமலைச் சாம்பல் பாய்ச்சப்பட்டது என்று இந்தோனீசியாவின் தேசிய எரிமலையியல் அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்தது.

இந்தோனீசியாவில் எரிமலைக் கொந்தளிப்பு வீறியத்தைப் பொறுத்தவரை லெவோட்டோபி லாக்கி-லாக்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆறுகளுக்கு அருகே வாழ்வோருக்கு எச்சரிக்கை

ஒருவேளை கனமழை பெய்தால் அபாயகரமான எரிமலைச் சாம்பல் கலந்த வெள்ள நீர் குறித்து ஆறுகளுக்கு அருகே வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று இந்தோனீசிய எரிமலையியல் அமைப்பு எச்சரித்துள்ளது.

எரிமலை குமுறியதைத் தொடர்ந்து மாவ்மெரெ (Maumere) எனும் நகரில் உள்ள விமான நிலையத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த விமான நிலையம், லெவோட்டோபி லாக்கி-லாக்கிக்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அதனால் அங்கு ஐந்து உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் தலைவர் பர்ட்டாஹியன் பஞ்சாய்ட்டன், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்