இந்தோனீசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் சிங்கப்பூரர்களுக்கு வெளியுறவு அமைச்சு அங்குள்ள நான்கு எரிமலைகளின் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தோனீசிய அதிகாரிகள் அந்த நான்கு எரிமலைகளுக்கும் குறிப்பிட்ட எச்சரிக்கை அளவுகளை வெளியிட்டுள்ளனர் என்று அமைச்சு தெரிவித்தது.
திங்கட்கிழமை (ஜூலை 20) வெளியிடப்பட்ட பயண அறிக்கையின்படி, லிவோடொபி லாகிலாகி என்ற ஃபுளோரெஸ் பகுதியில் உள்ள எரிமலை, கிழக்கு ஜாவாவில் இருக்கும் செமேரு எரிமலை, மத்திய ஜாவாவின் மெராப்பி எரிமலை, சுண்டா நீரிணையில் இயங்கும் கிராகடாவ் எரிமலை ஆகிய மலைகள் அனைத்துக்கும் மூன்றாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியா விடுக்கும் நான்கு கட்ட எச்சரிக்கை அளவுகளின்படி, முதல் நிலை வழக்கமான அளவுக்கானது. இரண்டாம் நிலை விழிப்புணர்வுடன் இருப்பதற்காகும். மூன்றாம் நிலை தயார்நிலையில் இருந்துகொள்வதற்காகும். நான்காம் நிலையே மிகவும் ஆபத்தான உச்சக்கட்ட விழிப்பு நிலைக்கானதாகும்.
எச்சரிக்கை நிலை மூன்று விடுக்கப்பட்டுள்ள அந்த நான்கு எரிமலைகளின் மையப்பகுதியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் சுற்றளவு வட்ட எல்லைக்குள் யாரும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெயர்கள் குறிப்பிடப்பட்ட அந்த எரிமலைப் பகுதிகளில் உள்ள சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளையும் ஊடகச் செய்திகளையும் கவனமாகக் கேட்டு நடக்கும்படி அமைச்சு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விமானத்துறைக்கான எரிமலைக் கண்காணிப்பு அறிக்கையை ஏஷியா ஒன் ஊடகம் சோதித்துப் பார்த்ததில், கடந்த 24 மணிநேரத்தில் லிவோடொபி லாக்கிலாக்கி எரிமலையும் செமேரு எரிமலையும் அதிர்ந்து வெடித்திருப்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவில் தற்போது உள்ள சிங்கப்பூரர்கள் வெளியுறவு அமைச்சுடன் மின்னிலக்க முறையில் பதிவு செய்துகொள்ளலாம்.
இந்தோனீசியா செல்லும் சிங்கப்பூரர்கள் அந்நாட்டு எரிமலை, புவியியல் பேரிடர் தணிப்பு அமைப்பிடம் மேல் விவரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

