தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2030க்குள் 35,000 வேலைகளைக் குறைக்க வோக்ஸ்வேகன் திட்டம்

1 mins read
5b1c43c0-dd01-40be-b91c-4861114ad13a
ஜெர்மனியின் ஹனுவ நகரில் உள்ள வோக்ஸ்வேகன் ஆலையில் வாகனங்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

ஹெனோவர்: ஐரோப்பாவின் ஆகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன், 2030க்குள் ஜெர்மனியில் 35,000 வேலைகளைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தெரிவித்தது.

பேரளவில் செலவுக் குறைப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தொழிற்சங்கங்களுடன் அது உடன்பாட்டை எட்டியுள்ளது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எட்டப்பட்ட அந்த உடன்பாடு, வோக்ஸ்வேகனுக்கு ஆண்டுக்கு ஏறத்தாழ €4 பில்லியனை (S$5.66 பி.) மிச்சப்படுத்தும்.

முன்னதாக, ஜெரிமனியில் தனது கார் தயாரிப்பு ஆலைகளை முற்றிலுமாக மூடுவது குறித்து தான் பரிசீலித்ததாக வோக்ஸ்வேகன் கூறியிருந்தது. அவ்வாறு அது செய்திருந்தால், வோக்ஸ்வேகனின் 87 ஆண்டுகால வரலாற்றில் எடுக்கப்படாத நடவடிக்கையாக இருந்திருக்கும்.

சீனாவில் உள்ளூர் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அதிகரித்துவரும் போட்டியை எதிர்கொள்ளும் வோக்ஸ்வேகன், மின்சார வாகன உற்பத்திக்கு மாறுவதில் தடுமாறி வந்துள்ளது.

அவ்டி, போர்ஷ, ஸ்கோடா உள்ளிட்ட 10 சின்னங்களின் உரிமையாளருமான வோக்ஸ்வேகன், ஐரோப்பாவில் குறைந்துவரும் தேவையையும் உயர்ந்துவரும் ஊழியர், தயாரிப்புச் செலவுகளையும் எதிர்கொண்டு வருகிறது.

திட்டமிடப்பட்ட €4 பில்லியன் செலவுக் குறைப்பில் €1.5 பில்லியன் சேமிப்பு, ஊழியர் செலவுகள் குறைக்கப்படுவதால் ஏற்படும் என வோக்ஸ்வேகன் கூறியது.

இந்நிலையில், செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஐஜி மெட்டல் தொழிற்சங்கப் பிரதிநிதி தோர்ஸ்டன் கிரேகர், ‘இந்த உடன்பாட்டின்படி ஆலைகளில் எதுவும் மூடப்படாது’ என்பதை வரவேற்றார்.

எனினும், ஜெர்மனியில் வோக்ஸ்வேகனின் 10 தொழிற்சாலைகள் அனைத்திலும் வாகனத் தயாரிப்பும் அதோடு சேர்த்து வேலைகளும் குறைக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்