பெர்லின்: செலவுகளைப் பெருமளவில் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கிட்டத்தட்ட 50,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஜெர்மனியின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃவோக்ஸ்வேகன் (Volkswagen) அறிவித்துள்ளது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்புகளையும் சேர்த்து வரும் 2030ஆம் ஆண்டுக்குள் பணிநீக்கம் செய்யப்படுவோரின் எண்ணிக்கை ஏறத்தாழ 100,000 ஆக உயரும்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான அது, அனைத்துலக அளவில் நிலவும் கடுமையான போட்டிகளை எதிர்கொள்ள தனது 89 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
அத்திட்டத்திற்கு நிறுவனத்தின் மேற்பார்வைக் குழு வியாழக்கிழமை (செப்டம்பர் 3) ஒப்புதல் அளித்துள்ளது.
நிறுவனத்தின் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், ஆடி, போஷே, ஸ்கோடா ஆகிய வணிக முத்திரைகளைக் கொண்ட வாகனங்களையும் தயாரிக்கும் ஃவோக்ஸ்வேகன், ஜெர்மனியில் உள்ள தனது நான்கு தொழிற்சாலைகளில் உற்பத்தியை நிறுத்தவுள்ளது.
எம்டன், ஸ்விகாவ், ஹானோவர், நெக்கர்சூல்ம் ஆகிய இடங்களில் உள்ள அந்த ஆலைகளில் 2034ஆம் ஆண்டிற்குள் கார் உற்பத்தி நிறுத்தப்படும். அவற்றிற்கு மாற்று வழிகள் பரிசீலிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது.
வரும் 2035ஆம் ஆண்டுக்குள் சந்தையில் விற்கப்படும் கார் மாடல்களின் எண்ணிக்கை 50 விழுக்காடுவரை குறைக்கப்பட உள்ளது.
தொழில்துறை வேலைவாய்ப்புகளையும் நிறுவனத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
நிறுவனத்தின் தயாரிப்புகளை உலகளவில் மேலும் ஈர்க்கக்கூடியதாகவும் போட்டித்தன்மை நிறைந்ததாகவும் மாற்ற பல பில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆலிவர் புளூம் கூறினார். அவரின் எதிர்காலத் திட்டத்திற்கு பெரும்பாலான பங்குதாரர்கள், தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளன.


