வாக்காளர் பட்டியல் திருத்தம்: இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்கக் குழு

வாக்காளர் பட்டியல் திருத்தம்: இந்தியாவை விமர்சிக்கும் அமெரிக்கக் குழு

படம்: ராய்ட்டர்ஸ்

20 Nov 2026 - 5:35 pm

2 mins read

வாஷிங்டன்: வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது சமயச் சிறுபான்மையினரைக் குறிவைப்பதை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது என அனைத்துலகச் சமயச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 130 மில்லியன் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் வரலாற்றில் இதுவே மிகப்பெரிய வாக்காளர் நீக்கமாகும்.

முஸ்லிம் குடிமக்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி, அவர்களை வெளிநாட்டினர் எனக் கூறிச் சட்டவிரோதமாக இந்தியா நாடுகடத்துவதாக ஆணையத் தலைவர் ஆசிஃப் மஹ்மூத் சாடினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி 2014ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் இந்தியாவின் மிகப்பெரிய சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாகுபாட்டை எதிர்கொள்வதாக உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

போலி, உயிரிழந்த, தகுதியற்ற வாக்காளர்களை மட்டுமே நீக்கியதாக இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்கியது. தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அது கூறியது.

முஸ்லிம்களை நாடுகடத்துவது அதிர்ச்சியளிப்பதாக ஆணையத்தின் ஜீன் மில்ஸ் கவலை தெரிவித்தார். இந்தியாவைத் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நாடாக அறிவிக்குமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சிடம் அவர் வலியுறுத்தினார்.

இந்திய வெளியுறவு அமைச்சு இக்குழுவை ஒருசார்பானது என நிராகரித்தது. மேலும் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதைப் புதுடெல்லி வன்மையாகக் கண்டித்தது.

வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் இந்தியாவில் பெரும் போராட்டங்களைத் தூண்டியது.

இந்த விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு அரசியல் சார்ந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அக்டோபரில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வெறுப்புப் பேச்சு, பாகுபாடான குடியுரிமைச் சட்டம் உள்ளிட்டவை மூலம் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக ஐநா நிபுணர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
முஸ்லிம்இந்தியாஅமெரிக்கா