கடும் பனிப்பொழிவுகிடையே ஜப்பானில் வாக்குப்பதிவு; தக்காய்ச்சிக்கு வெற்றி வாய்ப்பு

கடும் பனிப்பொழிவுகிடையே ஜப்பானில் வாக்குப்பதிவு; தக்காய்ச்சிக்கு வெற்றி வாய்ப்பு

2 mins read
9d1d302a-1680-4827-9d86-743247f290df
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். - EPA

தோக்கியோ: ஜப்பானியத் தேர்தலில் பிரதமர் சானே தக்காய்ச்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ஜப்பானிய தொலைக்காட்சியான என்எச்கே கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நாடாளுமன்றக் கீழவையில் உள்ள 465 நாடாளுமன்ற இடங்களில் பெரும்பான்மைக்குத் தேவையான 233 இடங்களைவிட அதிகமாக 274 முதல் 328 இடங்களை மிதவாத ஜனநாயகக் கட்சியும் (எல்டிபி) கைப்பற்றும் என்று கணிப்புகள் தெரிவித்தன. ஜப்பான் புத்தாக்கக் கட்சியுடன் இணைந்து, 366 இடங்கள் வரை அவரால் வெல்ல முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) மக்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு வெண்ணிறப் போர்வை போர்த்தியதுபோலக் காட்சியளிக்கிறது. வாக்கெடுப்பு நாளிலும் பனிப்பொழிவு கடுமையாக இருந்தது.

“நான் வாக்களிப்பது முக்கியம். அப்போதுதான் அரசியலில் முறையாக நாங்களும் பங்கேற்க முடியும்,” என்று தோக்கியோவில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகே தன்னை கோண்டோ என்று குறிப்பிட்ட 50 வயது மாது ஏஎஃப்பி செய்தியிடம் தெரிவித்தார்.

“பனி கொட்டினாலும் வாக்களித்தாக வேண்டும்,” என்றார் அவர்.

பனி மூடியிருந்ததால் வாக்குப் பெட்டிக்குச் செல்லும் பாதையைக் கண்டுபிடிக்க சிரமப்பட்டதாக வடக்கு ஜப்பானில் 70களில் இருந்த ஆமோரி என்பவர் என்எச்கே ஒளிபரப்பில் தெரிவித்தார்.

பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவுமிக்க பிப்ரவரியில் ஜப்பானிய பொதுத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தல், 2017க்கும் பிறகு எல்டிபிக்கு மாபெரும் வெற்றியாக அமையும் என்று நம்பப்படுகிறது. காலஞ்சென்ற ஷின்சே அபே இதே போன்ற வெற்றியை இதற்கு முன்னர் சாதித்திருந்தார்.

தக்காய்ச்சிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவும் உள்ளது.

வாக்களிப்பு இரவு 8 மணியுடன் (சிங்கப்பூர் நேரப்படி மாலை 7 மணி) நிறைவடைந்தது.

வாக்கு நள்ளிரவு வரையில் எண்ணப்பட்டு திங்கட்கிழமை (பிப்ரவரி 9) முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய எல்டிபியின் தலைவரும் பிரதமருமான தக்காய்ச்சி, இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட பிரிட்டனின் மறைந்த மார்கரெட் தாட்சரை முன்னுதாரணமாகக் கொண்டவர். கடந்த அக்டோபரில் எல்டிபியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

அதே சூட்டோடு, தைவானைப் பாதுகாக்க படைகளை அனுப்புவோம் என்று கூறி அவர் சீனாவை சீண்டினார். தைவானைச் சொந்தம் கொண்டாடும் சீனா, இதனால் கோபமடைந்த ஜப்பானை பல்வேறு வழிகளில் மிரட்டியது. ஆனால் அவற்றை தக்காய்ச்சி ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

குறிப்புச் சொற்கள்