ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: சாம்சுங் ஊழியர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை

ஊதிய உயர்வு பேச்சு தோல்வி: சாம்சுங் ஊழியர்கள் வேலைநிறுத்த எச்சரிக்கை

2 mins read
9fb2b666-050b-4ebe-9bfd-0cf8bb52b5e3
சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை எதிர்த்து, அதன் பகுதி மின்கடத்தி தொழிற்சாலை முன்பு ஏப்ரல் 23ஆம் தேதி போராட்டம் நடத்திய ஊழியர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆகப்பெரிய தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தவறியதைத் தொடர்ந்து அடுத்த வாரம் அதன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

50,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முழுநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் சாம்சுங்கின் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளிலும் கணினி நுண்சில்லுகளின் தயாரிப்புகளிலும் இடையூறு ஏற்படும் எனத் தெரிகிறது.

புதன்கிழமை (மே 13) வேலைநிறுத்தச் செய்தி வெளியானதும் தென்கொரிய பங்குச் சந்தையில் சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.7 விழுக்காடு சரிவு கண்டன.

உலகின் ஆகப்பெரிய நினைவக நுண்சில்லு உற்பத்தி நிறுவனமாக சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளது. அதற்கான சந்தையில் எஸ்கே ஹைனிக்ஸ் மற்றும் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனங்களின் போட்டியை அது சமாளித்து வருகிறது.

அப்படிப்பட்ட நிலையில், மே 21ஆம் தேதி தொடங்கும் வேலைநிறுத்தம் 18 நாள்களுக்கு நீடிக்கும் என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளதால், சாம்சுங்கின் பகுதி மின்கடத்தி செயல்பாடுகளில் இடையூறு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

நீண்ட நாள்களுக்கு வேலைநிறுத்தம் நீடித்தால், அடுத்த தலைமுறை பகுதி மின்கடத்திச் சில்லு உற்பத்தியில் வேகம் காட்டும் சாம்சுங்கின் முயற்சிகள் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எப்பாடுபட்டாவது வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க, சாம்சுங் நிறுவனத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் தலையிட்டு உதவும் என தென்கொரியப் பிரதமர் கிம் மின்-சியோக் கூறியதாக யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல, இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தென்கொரிய நிதி அமைச்சர் கூ யுன்-சியோலும் வலியுறுத்தி உள்ளார்.

“எந்த ஒரு சூழ்நிலையிலும் வேலைநிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ள வேலைநிறுத்தத்தைத் தடுக்க நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி வருகிறது சாம்சுங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்