ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் தன் கைகளில் காலணிகளை மாட்டிக் கொண்டு தவழ்ந்து செல்லும் காட்சி டிக்டாக் ஊடகத்தில் பரவியது.
‘கோடல் ரிகிரெஷன் சின்டிரம்’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுவனுக்கு கால் முட்டிகள் (knees), ஆடுசதைகள் (calves) இல்லை.
அவனுடைய நிலைமையை விளக்கும் விதமாக அவன் தாயார் கைகளில் காலணிகளை மாட்டிக் கொண்டு ஜோகூரில் பாலர் பள்ளிக்கு முதல் நாள் அவன் தவழ்ந்து செல்லும் காட்சியைப் பதிவேற்றினார்.
அதை 3.1 மில்லியன் பேர் பார்த்து சிறுவனுக்கு தங்கள் அனுதாபத்தைத் தெரிவித்தனர். பலர் அவனுக்கு பணம் தந்து உதவ முன்வந்தனர்.
ஆனால் அவனது தாயார் இதற்கு முன்னர் பதிவேற்றிய மற்றொரு காணொளி, அந்தச் சிறுவன் மருத்துவமனை ஒன்றில் நடைச் சக்கரவண்டியுடன் நடந்து செல்வதைக் காண்பித்தது. இதைப் பார்த்த இரும்புக் கடையில் பணி புரியும் முகமது இட்ருஸ் என்பவருக்கு அந்தச் சிறுவனுக்காக பணம் கொடுத்து உதவுவதைவிட அதுபோன்ற நடைச் சக்கரவண்டி ஒன்றை சிறுவனுக்கு ஏற்றவாறு வடிவமைத்துத் தரலாம் என்று தோன்றியது.
அந்த முன்னாள் அரச மலேசிய ஆகாயப் படை வீரர் சிறுவனின் உயரத்திற்கு ஏற்றவாறு அவனுக்கு ஒரு நடைச் சக்கரவண்டியை செய்து கொடுத்தார்.
அந்த நடைச் சக்கரவண்டியைச் செய்ய மலேசிய ரிங்கிட் 500 (S$151) ஆனதாக முகமது இட்ருஸ் தெரிவித்தார். அந்தச் சிறுவனின் தாயார் ஐந்து பிள்ளைகளை ஒற்றைத் தாயாராக வளர்க்கும் சிரமத்தை தன்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முகமது இட்ருஸ் கூறினார்.

