ஈரானுடன் போர் ஒப்பந்தம்: நிபந்தனைகளைக் கடுமையாக்கும் அதிபர் டிரம்ப்

ஈரானுடன் போர் ஒப்பந்தம்: நிபந்தனைகளைக் கடுமையாக்கும் அதிபர் டிரம்ப்

2 mins read
b7a65379-d34d-4829-a42e-64450ebe6e6d
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரானுடனான போர் நிறுத்த உத்தேச ஒப்பந்தத்தில் இருக்கும் நிபந்தனைகளை கடுமையாக்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் சண்டை நிறுத்த உத்தேச ஒப்பந்தத்தில் பல நிபந்தனைகளை மாற்ற முயற்சி செய்வதாக சனிக்கிழமை (மே 31) அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

அனைத்துத் தரப்புகளுடன் இறுதி ஒப்பந்தம் எட்டப்படாத நிலையில் மாற்றங்கள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்த மாற்றங்கள், சில நிபந்தனைகளைக் கடுமையாக்குவதும் அடங்கும் என்று அது பற்றி நன்கு அறிந்த அதிகாரிகளைச் சுட்டிக்காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அது, எத்தகைய மாற்றங்கள் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் ஈரானின் அணுசக்திப் பொருள்களை என்ன செய்யலாம் என்பது குறித்து அதிபர் டிரம்ப்புக்கு அக்கறை எழுந்ததால் அது பற்றிய நிபந்தனைகளை அவர் வலுப்படுத்த விரும்பியதாக ஆக்சியோஸ் செய்தித் தளம் கூறியது.

இதனால் இரு தரப்புகளுக்கான போர் ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நீண்டகாலம் நீடிக்கும் எனச் சொல்லப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகச் சேர்ந்து ஈரானைத் தாக்கியதில் போர் மூண்டது.

இந்நிலையில் புதிய உத்தேச ஒப்பந்தம், அதிபர் டிரம்ப்பின் கையெழுத்துக்காகக் காத்திருக்கிறது. மே 29ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு அவர் அது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை.

ஒருபோதும் அணுவாயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்று ஈரானை ஒப்புக் கொள்ளச் செய்வது, உலகின் 20 விழுக்காடு எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை திறப்பது உள்ளிட்ட நிபந்தனைகளில் டிரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது.

இதற்கிடையே போர் நிறுத்த வரைவு ஒப்பந்தத்தில் முடக்கப்பட்ட 12 பில்லியன் டாலர் (S$15.3 பில்லியன்) சொத்துகளை விடுவிப்பதும் அடங்கும் என்று ஈரானிய தொலைக்காட்சி தெரிவித்தது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அதிகாரபூர்வமற்ற வரைவை சுட்டிக்காட்டி தொலைக்காட்சி அவ்வாறு கூறியது.

இவ்வாரத் தொடக்கத்தில் இதேபோன்று ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்தபோது அமெரிக்கா அதனை மறுத்திருந்தது.

அமெரிக்கா-ஈரான் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் தமது சொந்த விளக்கத்தை அளித்த மறுநாள் ஈரானியத் தொலைக்காட்சியின் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு 60 நாள்களில் 12 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை அடைய அமெரிக்கா உறுதியளித்துள்ளதாகவும் அச்சொத்துகளை மற்ற வங்கிகளுக்கு மாற்றி செலவிட கட்டுப்பாடுகள் இல்லை என்றும் மே 30ஆம் தேதி ஈரானிய தொலைக்காட்சி கூறியிருந்தது.

குறிப்புச் சொற்கள்