தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரானுடனான போர் இஸ்‌ரேலுக்கு வாய்ப்புகளைத் தந்துள்ளது: நெட்டன்யாகு

2 mins read
3d4aadca-a6b1-4971-8205-5feec04f4128
பிணைக்கைதிகளின் விடுதலைக்கு இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முன்னுரிமை தர வேண்டும் என்று பல நாள்களாகவே இஸ்‌ரேலியர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: ஈரானுடனான 12 நாள் போர், இஸ்‌ரேலுக்கு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்று சென்றவர்களைத் திரும்ப பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.

திரு நெட்டன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலிய நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

அரசதந்திரம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க நீதிமன்றம் இணங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணை இப்போது நடத்தப்பட்டால் நெட்டன்யாகுவின் பேச்சுவார்த்தை ஆற்றலை அது பாதிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

எனவே, காஸா போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இஸ்‌ரேலிய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) மாலை கூடியதாக இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்தது.

திங்கட்கிழமை (ஜூன் 30) அது மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஈரான் மற்றும் காஸா தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்‌ரேலின் உத்திகள் விவகார அமைச்சர் ரோன் டெர்மர் திங்கட்கிழமை (ஜூன் 30) வெள்ளை மாளிகைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸாவில் 50 பிணைக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அவர்களது விடுதலைக்கு முன்னுரிமை கொடுப்பதாக அது அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதைப் பிணைக்கைதிகளில் குடும்பத்தினர் வரவேற்கின்றனர்.

பிரதமர் நெட்டன்யாகுவின் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டு பிணைக்கைதிகள் அனைவரையும் தாயகம் கொண்டு வந்து காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களது ஒருமித்த கருத்து.

இந்நிலையில், காஸாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் 50 பிணைக்கைதிகளில் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

60 நாள் சண்டை நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. பிணைக்கைதிகளில் 50 விழுக்காட்டிரை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் அவர்களுக்குப் பதிலாக பாலஸ்தீனக் கைதிகளையும் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் உடல்களையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அது கூறியது.

போர் நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் எஞ்சிய பிணைக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்