ஃபுளோரிடா: ஈரானுடனான போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
ஈரானை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கி வருகின்றன. ஈரானும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களையும் இஸ்ரேலையும் தாக்கி வருகிறது.
இரண்டு வாரங்களுக்கும் மேலாகப் போர் தொடர்கிறது.
மேலும் துபாய், கத்தார், ஓமான் உள்ளிட்ட பகுதிகளிலும் ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குகிறது. இதனால் மத்திய கிழக்கு வட்டாரமே பதற்றத்தில் உள்ளது.
போர் காரணமாக உலகப் பொருளியலும் அமெரிக்காவின் பொருளியலும் ஆட்டம் கண்டு வருகின்றன. கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது.
இதனால் இன்னும் சில வாரங்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இருப்பினும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் எண்ணத்தில் ஈரான் இல்லை. அமெரிக்காவுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுக்கப்போவதாக அது சூளுரைத்துள்ளது.
டிரம்ப் மிரட்டல்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானில் மேலும் அதிகமான தாக்குதலை நடத்தவுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, எண்ணெய் வளம் அதிகமாக உள்ள கார்க் தீவில் தாக்குதல் நடக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக ஈரானிடம் சமரசம் செய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானும் ஹோர்முஸ் நீரிணையைத் தடுத்து அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் உலகின் எரிசக்தி சந்தை ஆட்டம் கண்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள அமெரிக்காவின் தலைமையிலும் சில நாடுகளின் கூட்டுமுயற்சியிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.
ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த விவரங்களையும் அமெரிக்கா வெளியிடவில்லை.
இதனால் எப்போது ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ளும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி கச்சா எண்ணெய்யின் விலை ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலருக்கு மேல் விற்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை வழக்கம்போல் செயல்படாமல் போனால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

