வாஷிங்டன்: ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (செப்டம்பர் 16) கூறியுள்ளார்.
இவ்வேளையில், இப்போர் குறித்துக் கலந்துரையாட அடுத்த வாரம் ஐநா பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே வளைகுடா நாடுகளின் தலைவர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான் போர் ஏழாவது மாதமாக நீடித்து வருகிறது. அது முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், அதிபர் டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
நியூயார்க்கில் வளைகுடா நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்கையில், போருக்குப் பிந்தைய உத்திகள் குறித்து விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், கத்தார், பஹ்ரேன், குவைத், ஓமான் ஆகிய வளைகுடா ஒத்துழைப்பு மன்ற நாடுகளின் தலைவர்கள் அல்லது வெளியுறவு அமைச்சர்களைத் திரு டிரம்ப் சந்திப்பார். ஆனால், இதுகுறித்து வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சும் கருத்துரைக்க மறுத்துவிட்டன.
“போரின் முடிவு நெருங்குகிறது என்று நம்புகிறேன். ஈரான் உடன்பாடு காண விரும்புகிறது,” என்று திரு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், ஈரானிடமிருந்து நேரடியாகத் தகவல் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் டிரம்ப் போர் முடிவுக்கு வரும் என்று குறிப்பிட்டபோதும் சவூதி அரேபியாவும் ஏமனின் ஹூதிப் படையும் கடுமையான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
ஹூதிப் போராளிகள் சவூதி நகரங்களைக் குறிவைத்து ஆளில்லா வானூர்தி, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினார்கள். பதிலுக்கு சவூதி அரேபியா ஏமன்மீது 450 வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஹூதி ராணுவம் தெரிவித்துள்ளது.
போர்ப் பதற்றம் காரணமாக அமெரிக்கா தனது அரசாங்க ஊழியர்கள் ஏமன் எல்லைக்கு அருகே செல்வதைத் தடை செய்துள்ளது.
செங்கடல் பகுதியில் ஹூதி அமைப்பினரின் முன்னேற்றமும் சவூதியின் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களும் உலகளாவிய எண்ணெய் விநியோகப் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
ஈரானின் அணுவாயுத வலிமையைக் குறைப்பதே போரின் இலக்கு என்று அவர் கூறிவருகிறார். ஆனால் ஈரான் தன்னிடம் அணுவாயுதங்கள் இல்லை என மறுத்துவருகிறது. இவ்வேளையில், போரினால் எண்ணெய், எரிபொருள் விலைகள் உயர்ந்திருப்பது, வரவிருக்கும் இடைத்தேர்தலில் திரு டிரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பெருஞ்சவாலாக மாறியுள்ளது.
