மத்தியக் கிழக்குக் கடலில் போர் பதற்றம்: உலக வர்த்தகத்துக்கு அபாயம்

மத்தியக் கிழக்குக் கடலில் போர் பதற்றம்: உலக வர்த்தகத்துக்கு அபாயம்

வர்த்தகம் அனைத்துலக ரீதியில் பாதிப்படையும் என்று அஞ்சப்படுகிறது
1 of 2
படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
படம்: புளூம்பர்க்

02 Mar 2026 - 6:19 pm

2 mins read

துபாய்: மத்தியக் கிழக்கில் தொடரும் போர் அவ்வாட்டாரக் கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் ஆகப்பெரிய சரக்குக் கொள்கலன்களைக் கொண்ட கப்பல்கள் மத்தியக் கிழக்குக் கடலைத் தவிர்த்து வேறு பாதைகளை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கடலில் ஈரானுக்கு ஆதரவான ஹுதி போராளிகள் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சார்பான வர்த்தகக் கப்பல்களைத் தாக்கப்போவதாக மிரட்டியுள்ளனர். எனவே, எகிப்தின் சுவேஸ் கால்வாயைத் தவிர்த்து தென் ஆப்பிரிக்காவின் தெற்குப்பகுதியை நோக்கிக் கப்பல்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால் வர்த்தகம் அனைத்துலக ரீதியில் பாதிப்படையும் என்று அஞ்சப்படுகிறது.

கொள்கலன் வர்த்தகத்தில் முதலிடம் வகிக்கும் எம்எஸ்சி மெடிட்டரேனியன் ஷிப்பிங் நிறுவனம் மத்தியக் கிழக்குக்கான அதன் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளது.

இரண்டாம் நிலையில் உள்ள ஏ.பி.மொலர்-மெர்ஸ்க் அன்ட் ஹபக்-லாய்ட் நிறுவனம் ஹொர்முஸ் நீரிணைக்குச் செல்லும் பயணங்களை முற்றிலுமாக தவிர்த்துள்ளது.

டிபி வொர்ல்ட் நிறுவனம், ஈரானின் ஏவுகணையால் தாக்கப்பட்ட துபாயின் ஜெபெல் துறைமுகத்தில் உள்ள செயல்பாடுகளைத் தடை செய்துவிட்டதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தது.

அரேபிய வளைகுடா அல்லது பாரசீக வளைகுடா என்றழைக்கப்படும் பகுதியை ஜப்பானியக் கப்பல் நிறுவனங்கள் தற்காலிகமாகத் தடை செய்துள்ளன. பாதுகாப்பான பகுதிகளில் அவற்றின் கப்பல்களை அவை நிறுத்திவைத்துள்ளன.

வர்த்தகம், சுற்றுலா, போக்குவரத்து, நிதி போன்ற சேவைகளுக்குப் புகழ்பெற்ற துபாய் நகரும் தாக்குதலுக்கு உட்பட்டதன் காரணமாக அதன் அமைதியை சீர்குலைத்து வட்டார நிலைத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காவின் கிழக்குக் கரையில் இயங்கும் நிறுவனங்கள் ஆகியன துபாயின் மிகப்பெரிய தொழிற்பூங்காக்களின் வழியாகக் கப்பல் வர்த்தகத்தை மேற்கொள்கின்றன.

அனைத்துலக விமான சரக்கு போக்குவரத்துக்கும் துபாய் மையமாக விளங்குகிறது. ஈரானின் தாக்குதல்களால் அங்குள்ள முக்கிய விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

எனவே மத்தியக் கிழக்கின் போர் அதிர்வுகள் உலக விநியோகத் தொடரையும் பதற்றத்துக்குள்ளாக்கும் என்று வர்த்தக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குகடல்துறைகடல்துறைமுகம்வர்த்தகம்போர்