போரினால் பலவீனமாகும் வேலைவாய்ப்பு; அமெரிக்க மத்திய வங்கிக்கு நெருக்கடி

போரினால் பலவீனமாகும் வேலைவாய்ப்பு; அமெரிக்க மத்திய வங்கிக்கு நெருக்கடி

2 mins read
ea862d3e-00f1-4c69-8caf-c7d9c49fa403
மோசமான வானிலை, வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்றவை வேலைவாய்ப்பைக் குறைத்திருக்கலாம் என சிகாகோ மத்திய வங்கித் தலைவர் ஆஸ்டன் கூல்ஸ்பி தெரிவித்தார். - கோப்புப் படம்: புளும்பெர்க்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மாதாந்தர வேலை வாய்ப்பு வளர்ச்சி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக மார்ச் 6ஆம் தேதி வெளியான புதிய தரவுகள் காட்டுகின்றன.

மத்திய கிழக்கு வட்டாரத்தில் வெடித்துள்ள மோதலால் அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கையாண்டு வரும் அதே நேரத்தில், இந்தத் தரவுகள் அமெரிக்க மத்திய வங்கியை நெருக்கடியான சூழலில் தள்ளியுள்ளன.

பிப்ரவரி மாத வேலைவாய்ப்பு அறிக்கையின்படி, அம்மாதத்தில் 92,000 பணியிடங்களை முதலாளிகள் குறைத்துள்ளனர்; இதனால் வேலையின்மை விகிதம் சற்று உயர்ந்து 4.4 விழுக்காடானது.

இம்மாதம் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மத்திய வங்கி கொள்கை கூட்டத்திற்கு முன்னதாக, இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.

வட்டி விகிதங்களை 3.5% முதல் 3.75% வரை மாற்றமில்லாமல் வைத்திருக்க அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதத்தின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் தரவுகள் நெருக்கடியானவைதான் என்றாலும், அதை மட்டுமே வைத்து எந்தவொரு முடிவுக்கும் நாம் வரமுடியாது என சிகாகோ மத்திய வங்கியின் தலைவர் ஆஸ்டன் கூல்ஸ்பி மார்ச் 6ஆம் தேதி அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும், மோசமான வானிலை, வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்றவை வேலைவாய்ப்பைக் குறைத்திருக்கலாம் எனக் குறிப்பிட்ட அவர், பலவீனமடைந்து வரும் ஊழியர் சந்தை, உயர்ந்துவரும் பணவீக்கம் ஆகிய இரண்டும் மத்திய வங்கியின் இலக்குகளுக்கு எதிராக அமையும் என்பதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர் என்றார்.

2025ஆம் ஆண்டு டோனல்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றப் பிறகு, வர்த்தகப் பங்காளிகள்மீது விதித்த கூடுதல் வரி பணவீக்கத்தில் எதிரொலிக்கிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம், எரிசக்தி விலை உயர்வு ஆகியவை தற்காலிகமானதாக இருக்கும் பட்சத்தில், அதன் தொடர்பில் உடனடியாக எந்தவொரு முடிவையும் மத்திய வங்கி எடுக்காது எனத் திரு கூல்ஸ்பி கூறினார்.

ஆனால், பணவீக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மத்திய வங்கி நிர்ணயித்த 2 விழுக்காடு இலக்கைத் தாண்டி அதிகமாக இருப்பதால் நீண்டகாலப் போர் சிக்கலை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்