பேங்காக்: நவீன உலகில் அனைத்து இடங்களிலும் காணப்படும் வேதிப்பொருள்கள் மனித உடல்நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் வளர்ந்துவரும் உலகளாவிய அச்சுறுத்தலாக இருப்பதாகப் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாளமில்லாச் சுரப்பி செயல்பாட்டைப் பாதிக்கும் வேதிப்பொருள்களால் ஆண்டுதோறும் $1.3 டிரில்லியனுக்கும் (1 டிரில்லியன் அமெரிக்க டாலர்) அதிகமான உடல்நல, சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனச் சுற்றுப்புறத் திட்டமும் உலகச் சுகாதார நிறுவனமும் வெளியிட்ட அறிக்கை மதிப்பிட்டுள்ளது.
தற்போது நடப்பில் இருக்கும் விதிமுறைகள் போதாது என அனைத்துலக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
விளையாட்டு, ஒப்பனை, கட்டுமானம், ஆடைகள் என அனைத்திலும் அவ்வகை வேதிப்பொருள்கள் உள்ளன.
14 ஆண்டுகளாக நடத்தப்பட்ட நீண்ட ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை(நவம்பர் 17) வெளியாகின. அந்த விரிவான அறிக்கை, இவற்றுக்கும் பல்வேறு நோய்களுக்கும் இடையிலான தெளிவான தொடர்பை உறுதிப்படுத்துயுள்ளது.
நரம்பியல் பாதிப்புகள், விந்தணுக் குறைபாடு உள்ளிட்ட இனப்பெருக்கப் பிரச்சினைகள், நீரிழிவு, ஆஸ்துமா ஆகிய நோய்களுடன் அவ்வேதிப்பொருள்கள் தொடர்புடையவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதய நோய்களுக்கான காரணிகளாக அவை இருப்பதாகக் குறிப்பிட்ட ஆய்வாளர்கள், குறைந்த அளவில்கூட அவை உடல்நலத்தைப் பாதிக்கக்கூடும் என எச்சரித்தனர்.
குறிப்பாக, வேதிப்பொருள்களுக்கு எதிராகப் பலவீனமான விதிமுறைகள் கொண்ட நாடுகளில் அத்துறை, மறுபயனீட்டுத் துறை ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர்.
தாய்லாந்து, கென்யா ஆகிய நாடுகளில் உள்ள நெகிழி, மறுபயனீட்டுத் துறை ஊழியர்கள் 20க்கும் மேற்பட்ட ஆபத்தான வேதிப்பொருள்களின் பாதிப்புக்கு ஆளாவது 2024ஆம் ஆண்டு ஆய்வில் தெரியவந்துள்ளது. அலுவலக ஊழியர்களும் குறைந்தது 11 வேதிப்பொருள்களின் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கண்டறியப்பட்ட 1,000 வேதிப்பொருள்களில் பல முறையாகச் சோதிக்கப்படவில்லை. வேதிப்பொருள்கள் ஒன்றிணைந்து ஏற்படுத்தும் கூட்டுத் தாக்கம் குறித்தும் கவலை எழுந்துள்ளது.
பாதுகாப்பான அளவு எதுவெனத் தெரியாததால், நெகிழி உற்பத்தி விரிவாக்கத்தை நிறுத்தி, அபாயகரமான வேதிப்பொருள்களைத் தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
