ஈரானின் 10 அம்சத் திட்டம் மூலம் ‘ஏமாற்றுதல், இரட்டை வேடம்’ போடுவதற்கு எதிராக எச்சரிக்கை

ஈரானின் 10 அம்சத் திட்டம் மூலம் ‘ஏமாற்றுதல், இரட்டை வேடம்’ போடுவதற்கு எதிராக எச்சரிக்கை

2 mins read
2957e9f6-b96d-4b52-af51-383308a9172e
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்புடன் தொலைபேசியில் உரையாடும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக்

கோலாலம்பூர்: ஈரான் முன்மொழிந்து, அமெரிக்காவால் சாதகமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்சத் திட்டத்தை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வரவேற்றுள்ளார். ஆனால், “பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் ஏமாற்று மற்றும் இரட்டை வேடங்களால் மூடப்பட்டிருந்தால், அமைதிப் பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற முடியாது,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

2023ல் காஸா மோதல் தொடங்கியதிலிருந்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வெளியுறவுக் கொள்கையின் தீவிர விமர்சகராக இருந்துவரும் அவர், “ஈரானுக்கு மட்டுமல்ல, ஈராக், லெபனான் மற்றும் ஏமனுக்கும் ஒரு விரிவான அமைதி ஒப்பந்தம் தேவை,” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“மேலும், பாலஸ்தீன மக்களின், குறிப்பாக காஸாவின் இனப்படுகொலை மற்றும் ஆக்கிரமிப்புக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட தரப்பினரின் கடமையாகும்,” என்று அவர் புதன்கிழமை (ஏப்ரல் 8) வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இந்தத் தருணத்தை ஏற்படுத்த உதவிய, அயராத மற்றும் துணிச்சலான அரசதந்திரத்திற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆற்றிய முக்கியப் பங்கையும் அன்வார் பாராட்டினார்.

“பயமோ பாரபட்சமோ இன்றி, அனைத்துத் தரப்பினருடனும் பேச பாகிஸ்தான் காட்டும் விருப்பம், முஸ்லிம் ஒற்றுமை மற்றும் அனைத்துலகப் பொறுப்பின் மிக உயர்ந்த மரபுகளைப் பிரதிபலிக்கிறது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

சவூதி அரேபியா உட்பட பல வளைகுடா நாடுகள், தங்களுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தராகச் செயல்படுமாறு கோலாலம்பூரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக முன்னதாகக் கூறியிருந்த திரு அன்வார், மத்திய கிழக்கில் அமைதிக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கவும் துணைபுரியவும் மலேசியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தினார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு தனி அறிக்கையில், மலேசிய வெளியுறவு அமைச்சு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, மோதல்களைத் தீர்ப்பதற்கு அரசதந்திரமே ஒரே சாத்தியமான வழி என்றும் வலியுறுத்தியது.

“அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்தத்தின் விதிமுறைகளை நல்லெண்ணத்துடன் முழுமையாக மதித்துச் செயல்படுத்தவும், வட்டாரத்தின் நிலைத்தன்மையை சீர்குலைக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்கவும் மலேசியா வலியுறுத்துகிறது,” என்று அது கூறியது.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் புதன்கிழமை அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை வரவேற்றனர்.

“நேற்று இரவு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்ட இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன். இந்த அறிவிப்பு, பதற்றத்தைத் தணித்துள்ளது,” என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் கூறினார். மேலும், ஒரு நீடித்த தீர்வுக்காகப் பேச்சுவார்த்தைகள் தொடர்வது மிகவும் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வட்டாரத்தில் நீடித்த அமைதியை அடைவதற்காக, அனைத்துத் தரப்பினரும் அதன் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று தாம் வலியுறுத்துவதாக ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் கோஸ்டா எக்ஸ் தளத்தில் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்