வாஷிங்டன்: அமெரிக்காவின் 250ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரக் கேட்டை விளைவிக்குமோ என்ற அச்சம் பரவுகிறது.
மாபெரும் கொண்டாட்டத்திற்கு வாஷிங்டன் தயாராகி வரும் நிலையில் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் 250ஆவது ஆண்டு விழா ஜூலை 4ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படுகிறது. அந்தக் கொண்டாட்டம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அந்த விழாவையொட்டி, டிரம்ப் நிர்வாகம் ‘ஃப்ரீடம் 250’ பிரசாரத் திட்டத்தை வழிநடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக பென்சில்வேனியாவைச் சேர்ந்த ‘பைரோடெக்னிகோ’ என்னும் நிறுவனம் வாணவேடிக்கைகளை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆப்ரகாம் லிங்கன் நினைவுச் சின்னம் மற்றும் பொட்டோமாக் நதியைச் சுற்றியுள்ள 10 இடங்களில் 850,000க்கும் மேற்பட்ட வாணவேடிக்கைகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வாணவேடிக்கை உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்குத் (சிங்கப்பூர் நேரம் ஜூலை 5 காலை 10.30 மணி) தொடங்கி 40 நிமிடங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பிலிப்பீன்ஸில் கடந்த 2016ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட கின்னஸ் சாதனையை முறியடிக்கும். அப்போது பிலிப்பீன்ஸ் நிகழ்த்திய வாணவேடிக்கைகளைக் காட்டிலும் இது 40,000 அதிகம். அத்துடன் அமெரிக்கா வருடந்தோறும் நிகழ்த்தும் வாணவேடிக்கையைக் காட்டிலும் இது 50 மடங்கு அதிகம்.
ஆனால், ஏற்கெனவே காற்று மாசுபட்டிருக்கும் நிலையில் 850,000 பட்டாசுகளை வானில் வெடிக்கச் செய்வது விவேகமற்ற செயல் என்று விமர்சிக்கப்படுகிறது.
இதுகுறித்து மேரிலாண்ட் பல்கலைக்கழக வளிமண்டல வேதியியல் பேராசிரியர் ரஸல் டிக்கர்சன் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கவலை தெரிவித்தார்.
வாணவேடிக்கை, கொண்டாட்ட உணர்வைத் தூண்டும் என்றபோதிலும் பயன்படுத்தப்பட இருக்கும் எண்ணிக்கை பயமுறுத்துவதாக உள்ளது என்றார் அவர்.
பட்டாசுகள் வெளிப்படுத்தும் நுண்ணிய துகள்களே மிகப்பெரிய கவலைக்குரிய விஷயம் என்றார் அவர். அதாவது 2.5 மைக்ரோமீட்டர் அல்லது அதற்கும் குறைவான அளவுள்ள அந்தத் துகள்கள், நுரையீரலின் ஆழமான பகுதிக்குள் ஊடுருவி சுகாதாரக் கேட்டை விளைவிக்கக்கூடியவை என்று அவர் விளக்கினார்.

