வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் 1,000 சதுர கிலோமீட்டருக்கும் (100,000 ஹெக்டேர்) அதிகமான பரப்பளவில் காட்டுத் தீ தீவிரமாகப் பரவி வருகிறது.
இதனால் அப்பகுதியில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மருத்துவமனைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட முக்கியக் கட்டடங்களில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டாலும், அங்குள்ள 60,000க்கும் மேற்பட்டவர்கள் மின்சாரமின்றித் தவித்து வருவதாகவும் அனைத்துலகச் செய்திக்குறிப்புகள் தெரிவித்தன.
அம்மாநில ஆளுநர் பாப் பெர்கசன் அவசரநிலைப் பிரகடனம் செய்து, தீ மூட்டுவதற்குத் தடையும் விதித்துள்ள நிலையில், இச்சம்பவத்தில் இப்போதைக்கு உயிரிழப்புகளோ காயங்களோ பதிவாகவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிவதால் அதனைக் கட்டுப்படுத்தும் பணியில் நிர்வாகம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாக, மாநில பொது நில ஆணையர் டேவ் அப்தேகிரோவ் இணையவழி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தையொட்டி நீர்ச் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவிலிருந்து எரிசக்தி தயாரிக்கும் ஆலை, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனை உள்ளிட்ட ஸ்போகேன் நகரின் சில முக்கிய மையங்களில் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலானோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக நகர மேயர் லிசா பிரவுன் கூறினார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி உள்ளூர் நேரம் பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி (சிங்கப்பூர் நேரம் ஆகஸ்ட் 2, அதிகாலை 6.30 மணி), ஸ்போகேனில் உள்ள ஏறத்தாழ 200 வீடுகளில் இருந்தோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
“இவை நகரின் பெரிய பகுதிகள் என்பதால், பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதுகிறேன்,” என்று திருவாட்டி பிரவுன் குறிப்பிட்டார்.

