கட்டுமானக் குப்பை பொந்தியானில் குவிக்கப்படுவதாகக் கூறப்படுவதை அறிந்துள்ளோம்: என்இஏ

கட்டுமானக் குப்பை பொந்தியானில் குவிக்கப்படுவதாகக் கூறப்படுவதை அறிந்துள்ளோம்: என்இஏ

1 mins read
4bc1bb50-82e4-438b-bdd6-763b4ebbd592
பொந்தியானில் காணப்பட்ட, சிங்கப்பூரிலிருந்து எடுத்துவரப்பட்டதாக நம்பப்படும் கட்டுமானக் குப்பை. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கட்டுமானக் குப்பை, மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் வட்டாரத்தில் குவிக்கப்படுவதாக வெளியான செய்தியைத் தாங்கள் அறிவதாகத் தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் தகவல்களைச் சேகரிக்கத் தாங்கள் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளதாக வாரியம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.

சிங்கப்பூரிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கட்டுமானக் குப்பை, பொந்தியான் வட்டாரத்தின் பல இடங்களில் குவிக்கப்படுவதாக மலேசிய ஊடகமான கொஸ்மோ இம்மாதம் 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய சுற்றுப்புற வாரியம் பதிலளித்துள்ளது.

“சிங்கப்பூரின் விதிமுறைக் கட்டமைப்பின்படி, குவிக்கும்போது ஆபத்து விளைவிக்கக்கூடிய கட்டுமான மற்றும் கட்டட இடிப்புக் குப்பையைக் குவிக்க அனுமதி கிடையாது,” என்று வாரியம் குறிப்பிட்டது. அதேவேளை, திடமான கட்டுமானப் பாறைகள், தரைக் கற்கள் போன்றவற்றைக் குவிக்க ‘பாசல்’ ஒப்பந்தத்தின்கீழ் அனுமதி உள்ளதாக வாரியம் சுட்டியது.

பல நாள்களில் நள்ளிரவுக்குக் பிறகு லாரிகள் கட்டுமானக் குப்பையைக் குவிப்பதாக பொந்தியானில் உள்ள சில கிராமவாசிகள் கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவத்தனர். அந்தக் குப்பைச் சிங்கப்பூரிலிருந்து வருவதாக ஜோகூர் அதிகாரிகள் நம்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொஸ்மோ ஊடகம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து கட்டுமானக் குப்பை சட்டவிரோதமாகக் குவிக்கப்படுவதாகக் கூறப்படும் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களை ஜோகூர் மாநில அதிகாரிகள் மூடினர்.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாகட்டுமானம்குப்பைதேசிய சுற்றுப்புற வாரியம்