ஈரானில் உள்ள இந்தோனீசியர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்: ஜகார்த்தா

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்

ஈரானில் உள்ள இந்தோனீசியர்களுடன் தொடர்பில் இருக்கிறோம்: ஜகார்த்தா

2 mins read
90798c0b-704f-4ee3-bb12-0bfeeda2c4fe
ரியாதில் உள்ள கிங் காலித் அனைத்துலக விமானநிலையம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) வெறிச்சோடி இருந்தது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: மத்திய கிழக்கில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தோனீசியர்கள் வட்டாரப் போர்ச்சூழல் கடுமையாகும் என்று அஞ்சுகின்றனர்.

நோன்பு மாதத்தில் ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஈரானியத் தலைநகர் டெஹ்ரானிலும் மற்ற நகரங்களிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் வார இறுதியில் தாக்குதல்களை நடத்தின. ஈரானும் பதிலுக்குத் திருப்பித் தாக்கியது.

மத்திய கிழக்கு வட்டாரத்தின் பல நகரங்களில் நடந்த வெடிப்புச் சம்பவங்களில் பலர் மாண்டனர். ஈரானிலும் பக்கத்து நாடுகளிலும் இருக்கும் இந்தோனீசியர்களிடையே அவை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. உம்ரா புனித யாத்திரைக்காகச் சவூதி அரேபியா சென்றுள்ள 60 ஆயிரம் பேரும் அவர்களில் அடங்குவர்.

டெஹ்ரானில் இருக்கும் இந்தோனீசியத் தூதரகம், ஈரானில் 329 இந்தோனீசியர்கள் பதிவுசெய்திருப்பதாகத் தெரிவித்தது. அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அது கூறியது. குடிமக்களை விழிப்புடன் இருக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அண்மைப் போரில் இந்தோனீசியர் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. ஆயினும் மத்திய கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தோனீசிய ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும் என்று தொழிலாளர் உரிமை அமைப்பொன்று எச்சரித்தது.

மத்திய கிழக்கு வட்டார நிலவரத்தை அணுக்கமாய்க் கண்காணித்து வருவதாக இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. பாதிக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் இந்தோனீசியர்களைக் குடிமக்கள் பாதுகாப்பு இயக்குநரகம் தொடர்புகொண்டுள்ளதாக அமைச்சு சொன்னது.

மத்திய கிழக்கில் பூசல் மோசமடைந்திருக்கும் நிலையில், கருடா இந்தோனீசியா நிறுவனம் தோஹாவுக்கான அதன் விமானச்சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், இந்தோனீசியா, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் சமரசப் பேச்சு தோல்வியடைந்தது குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும் அது கேட்டுக்கொண்டது.

அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டால் இந்தோனீசிய அதிபர் டெஹ்ரானுக்குச் சென்று சமரசம் செய்துவைக்கவும் தயாராய் இருப்பதாகவும் ஜகார்த்தா கூறியது. இருப்பினும், சமூக ஊடகத்தில் அதற்கு எதிரான கருத்துகளைச் சிலர் பதிவிட்டுள்ளனர். ஈரானுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையில் இப்போது சுமுகமான உறவு இல்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்