போட்டியைக் கைவிட்டு இணைந்து செயல்படுவோம்: அமெரிக்காவிடம் சீன அதிபர் வலியுறுத்து

போட்டியைக் கைவிட்டு இணைந்து செயல்படுவோம்: அமெரிக்காவிடம் சீன அதிபர் வலியுறுத்து

1 of 2
படம்: இபிஏ
படம்: ஏஎஃப்பி

24 Sep 2026 - 3:14 pm

2 mins read

அமெரிக்காவும் சீனாவும் எதிரெதிர் போட்டியாளர்களாக இருப்பதைவிடக் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும் எனச் சீன அதிபர் ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவருக்கு வாஷிங்டனில் புதன்கிழமை (செப்டம்பர் 23) மாலை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அளித்த வரவேற்புக்குப் பின்னர் அவர் இதனை அறிக்கையொன்றில் வலியுறுத்தினார்.

அந்த அறிக்கையைச் சீன அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்டுள்ளது..

“சீன, அமெரிக்க மக்களுக்கு இடையே நீண்டகாலமாக நட்புறவு நிலவி வருகிறது. நமது நலன்களும் ஒன்றோடொன்று ஆழமாகப் பிணைக்கப்பட்டுள்ளன,” என்றும் திரு ஸி குறிப்பிட்டுள்ளார்.

வாஷிங்டனுக்கு வெளியே மேரிலேண்ட் ‘ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸ்’ அமெரிக்க ராணுவ விமானத்தளத்தில் சீன அதிபருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு ஸி தமது மனைவி பெங் லியுவானுடன் விமானத்திலிருந்து இறங்கியபோது திரு டிரம்ப்பும் அவரது மனைவி மெலனியாவும் அவ்விருவரையும் கைகுலுக்கி வரவேற்றனர். அப்போது திரு டிரம்ப் கையுறை அணிந்திருந்தார்.

இருநாடுகளின் தேசிய கீதங்களை ராணுவ இசைக்குழு இசைத்தபோது விமானத் தளத்தில் தலைவர்கள் இருவரும் அருகருகே நின்றிருந்தனர்.

அப்போது ராணுவ வரவேற்பை உணர்த்தும் வகையில் இரண்டு பி-1 ரகக் குண்டுவீச்சு விமானங்கள் உரத்த சத்தத்துடன் மேலே பறந்துசென்றது திரு டிரம்ப்பைச் சற்றுத் திடுக்கிட வைத்தது. ஆனால், அருகே நின்றிருந்த திரு ஸி எவ்விதச் சலனமுமின்றி அமைதியாகக் காணப்பட்டார்.

பல்வேறு அம்சங்கள் குறித்து திரு டிரம்பிடம் விவாதிக்க உள்ளது பற்றிக் குறிப்பிட்ட திரு ஸி, “இருதரப்பு உறவுகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலை தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிபர் டிரம்ப்புடன் பேச்சு நடத்தற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

“சீனாவின் மாபெரும் மறுமலர்ச்சிக்கான இலக்கும் ‘மீண்டும் மகத்தான அமெரிக்கா’ என்ற இலக்கும் முழுமையாகக் கைகோத்துச் செல்லமுடியும்.

“இரு வல்லரசுகளும் இணைந்து செயல்பட சரியான பாதையை வகுக்க வேண்டும். அதை நம்மால் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று திரு ஸி கூறியதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது.

மேலும், “இருதரப்பின் கூட்டு முயற்சிகளால், இந்தப் பயணம் சிறப்பான பலன்களைத் தரும் என்றும் அமெரிக்க, சீன மக்களின் நலனை மேம்படுத்தி, உலக அமைதிக்குப் புதிய நம்பிக்கையைக் கொண்டுவரும் என்றும் நம்புகிறேன்,” என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு முதல் வர்த்தகம் மற்றும் ஈரான் வரையிலான பிரச்சினைகளில் இரு வல்லரசுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த அரசுமுறைப் பயணத்தின் தொடக்கமாக, அதிபர் டிரம்ப் நேரடியாக விமான நிலையத்துக்குச் சென்று சீன அதிபரை வரவேற்றது அரிதான ஒரு சம்பவம்.

அமெரிக்கா, சீனா இடையே ஓராண்டுக்கும் மேல் வர்த்தக மோதல் தொடரும் நிலையில், திரு ஸியின் அமெரிக்க வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
ஸி ஜின்பிங்டோனல்ட் டிரம்ப்வாஷிங்டன்