பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் மனிதவள அமைச்சர் எம். சரவணனின் 12 வயது மகனிடம், சொத்து விவரங்களைத் தெரியப்படுத்துமாறு உத்தரவுக் கடிதத்தைத் தாங்கள் பிறப்பித்ததாகக் கூறப்படுவதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) மறுத்துள்ளது.
அத்தகைய உத்தரவுக் கடிதங்களை எந்த வயதுப் பிரிவினருக்குப் பிறப்பிக்கலாம் என்று சட்டம் குறிப்பிடவில்லை என்றாலும்கூட சரவணனின் மகன் விவகாரத்தில் அவ்வாறு செய்யவேண்டாம் என்று ஆணையம் முடிவெடுத்ததாக அதன் தலைமை ஆணையர் அப்துல் ஹலிம் அமான் கூறியுள்ளார்.
“சட்டப்படி பெரியவர் சிறியவர் என எந்த வயதுப் பிரிவினருக்கு அவ்வாறு செய்யலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. சம்பந்தப்பட்டோரின் உறவினர், ஒன்றாக வேலை செய்தவர்களைப் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அந்த வகையில், 12 வயது சிறுவனைப் பொறுத்தவரை எது நியாயமானது என்பதைக் கருத்தில்கொண்டு முடிவெடுத்தோம். 12 வயது மகனுக்கு நாங்கள் உத்தரவுக் கடிதம் பிறப்பிக்கவில்லை,” என்று திரு ஹலிம் கூறியதாக ஹரியா மெட்ரோ ஊடகம் தெரிவித்தது.
எம்ஏசிசி தலைமையகத்தில் 12 வயது சிறுவன் இருந்தது, விசாரணை தொடர்பில் உத்தரவுக் கடிதத்தைப் பெறுவதற்கே என்று அர்த்தமாகாது என்றார் அவர்.
“அந்தச் சிறுவன் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக வரவில்லை. தனது பெற்றோருடன் சேர்ந்து வந்திருந்தார், அவ்வளவுதான்,” என்று அவர் விளக்கினார்.
சரவணனின் 12 வயது மகனிடம் உத்தரவுக் கடிதத்தைப் பிறப்பிக்க அவரைத் தலைமையகத்துக்கு வரவழைத்து எம்ஏசிசி அதன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி குற்றஞ்சாட்டியிருந்தார். சொத்து விவரங்களைத் தெரியப்படுத்த சரவணனும் அவரின் குடும்பத்தாரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) எம்ஏசிசி அலுவலகத்துக்கு நேரில் சென்றனர்.
