ஜோகூர் பாரு: தேர்தலில் போக்கை மாற்றும் நோக்குடன் செயல்பட்ட வர்த்தகத் தளத்துக்குத் தாங்கள் இடையூறு அளித்ததாக செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்திரோபிக் கூறியுள்ளது.
அந்தத் தேர்தல் குறுக்கீட்டு நடவடிக்கை பெரும்பாலும் மலேசியாவில் இருப்பவர்களைக் குறிவைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 1,000 போலி சமூக ஊடகக் கணக்குகள், ஒரு போலி செய்தி இணையத்தளம் ஆகியவை சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் குறுக்கீட்டுத் தளம், தொகுதி வாரியாக மலேசிய வாக்காளர்களைக் குறிவைக்கும் ஆற்றல் கொண்ட தளத்தை உருவாக்கத் தங்களின் கிளாட் செயற்கை நுண்ணறிவு முறைகளைப் பயன்படுத்தியதாக ஆந்திரோபிக் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) மிரட்டல்கள் குறித்த தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது.
சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட குறுக்கீட்டு நடவடிக்கைகளுக்குத் தாங்கள் இடையூறு விளைவித்ததாக ஆந்திரோபிக் தெரிவித்தது; அவற்றின் விவரங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இணைய நடவடிக்கைகள், பிறரின் கருத்துகளை மாற்றும் நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள், மோசடிச் செயல்கள் உள்ளிட்டவை அத்தகைய நடவடிக்கைகளில் அடங்கும்.
மலேசியாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எந்தத் தரப்பு பணம் தந்தது என்பதையும் மலேசியத் தேர்தலுடன் அந்நடவடிக்கைக்குத் தொடர்பிருந்ததா என்பதையும் ஆந்திரோபிக் அடையாளம் காணவில்லை.

