நாம் ‘ஏஐ’யைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் அது நம்மைக் கட்டுப்படுத்தும்: அன்வார்

நாம் ‘ஏஐ’யைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் அது நம்மைக் கட்டுப்படுத்தும்: அன்வார்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

24 Sep 2026 - 6:14 pm

2 mins read

கோலாலம்பூர்: உலக நாடுகள் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில் அந்தத் தொழில்நுட்பம் அவர்களுக்கு ஆபத்தாக மாறும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரித்துள்ளார்.

“உற்பத்தியை அதிகரிப்பது, சிறிய வணிகங்கள் போட்டியிட உதவுவது, தொழில்துறைகளை அதிக மதிப்புள்ள பணிகளை நோக்கி நகர்த்துவது என மலேசியாவின் ஏஐ நோக்கங்கள் தெளிவாக உள்ளன,” என்று அவர் கூறினார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஐந்தாவது உலக மின்னிலக்க வர்த்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் திரு அன்வார் உரையாற்றிய போது இக்கருத்தைப் பதிவு செய்தார்.

“தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மனிதக் குலத்தின் சேவைக்காகவே இருப்பதை உறுதிசெய்ய, அறநெறி அடிப்படையிலான கட்டமைப்பு அவசியம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“ஒன்று நாம் செயற்கை நுண்ணறிவை ஆள வேண்டும் அல்லது செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளும்,” என்று திரு அன்வார் தமது உரையில் சொன்னதாக பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மிகவும் மேம்பட்ட, அதிக அறிவாற்றல் கொண்ட கட்டமைப்புகளால் அபாயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் ஓப்பன்ஏஐ, அந்திரோபிக், கூகல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஏஐ மேம்பாட்டுப் பணிகளைக் குறைக்க வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு வரும் நேரத்தில் தற்போது திரு அன்வாரின் கருத்து வெளியாகியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் இணையப் பாதுகாப்பு சோதனைகளின் போது, ஓப்பன்ஏஐ மாதிரிகளைப் பயன்படுத்தி முகவர்கள் ஹக்கிங் ஃபேஸ் தளத்திற்குள் நுழைந்த சம்பவம், சக்திவாய்ந்த ஏஐ கட்டமைப்புகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்த கவலைகளைத் தீவிரப்படுத்தியது.

அதேபோல், ஓப்பன்ஏஐ உருவாக்கிய ஏஐ முகவர் ஒருவர், ஜூன் மாதம் தனது சுகாதாரத் தரவு இணையதளத்தை மீறிக் கோப்புகளை அனுமதியின்றி அணுகியதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஓர் அரசு இணையத்தளத்தை ஏஐ முகவர் ஊடுருவல் செய்ததாக அறியப்படும் முதல் நிகழ்வாக இது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஅன்வார் இப்ராகிம்ஏஐ