கோலாலம்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்படும் தாக்கத்திற்குக் காத்திராமல், சீனா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக உறவைக் கட்டியெழுப்ப மலேசியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் என அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறினார்.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், வர்த்தக உறவை மேம்படுத்த அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு மலேசியா காத்திருந்தால் அது நாட்டுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
பல புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், வரிவிதிப்பை எதிர்கொள்வதில் மலேசியா அவசரம் காட்டக் கூடாது என்றார் அன்வார்.
வர்த்தகப் பங்காளிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கத் தேவையான ஊக்கமான செயல் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என மலேசியப் பிரதமர் சொன்னார்.

