கோலாலம்பூர்: ரோஹிங்கியா அகதிகளைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பாக அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர்களுடன் மலேசியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) தெரிவித்தார்.
ரோஹிங்கியா சிறுபான்மையினர் மீது மியன்மார் ராணுவம் 2017ஆம் ஆண்டு நடத்திய அடக்குமுறை இனப்படுகொலைக்கு ஒப்பானது என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தது.
மியன்மாரின் முன்னாள் ராணுவ ஆட்சித் தலைவராக இருந்து அதிபராகப் பொறுப்பேற்றுள்ள மின் ஆங் ஹ்லைங்குடனான தமது பேச்சுவார்த்தை, மலேசியாவின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். துன்புறுத்தலுக்கு அஞ்சித் தப்பி ஓடியவர்களுக்குப் பாதுகாப்பான, கண்ணியமான தாயகம் திரும்புதலை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்ற அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றபடி அவை அமைந்துள்ளன என்று திரு அன்வார் கூறினார்.
உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழலில் மக்களைத் திருப்பி அனுப்புவது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்நடவடிக்கை மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மனித உரிமைக் குழுக்கள் விமர்சித்துள்ளன.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான மியன்மார் நாட்டவரைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பும் பணிகளுக்காகக் கடந்த மாதம் மின் ஆங் ஹ்லைங்கை மலேசியா வரவேற்றது.
மலேசியாவில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மலேசியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது பெரும் நிதிச் சுமையாகவும், பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளதாக மலேசியா தெரிவித்துள்ளது.
ஐநா அகதிகள் பிரிவின் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை மலேசியாவில் 225,740 அகதிகளும் தஞ்சம் நாடுவோரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினர் மியன்மாரைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகளை மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. அவர்களில் ரோஹிங்கியா இனத்தவர் எவரேனும் உள்ளனரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. டிசம்பர் 6, 7ஆம் தேதிகளில் மேலும் 1,500 மியன்மார் நாட்டவர்களைத் திருப்பி அனுப்ப மலேசியா திட்டமிட்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார்.
மலேசியாவில் தற்போது இருக்கும் ஏறத்தாழ 10,000 ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று துருக்கி தெரிவித்ததாக அவர் கூறினார்.
