தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எதிரிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அழிப்போம்: இஸ்ரேல்

2 mins read
5cfea465-145c-4a8f-a492-f051911f5f73
இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் - படம்: ராய்ட்டர்ஸ்

ஜெருசலம்: எதிரிகள் எந்த நாட்டில் பதுங்கி இருந்தாலும் அவர்களை ஒழித்துக்கட்டுவோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அண்மையில், இஸ்ரேல் கத்தாரில் தங்கியுள்ள ஹமாஸ் தலைவர்களின்மீது தாக்குதல் நடத்தியது. கத்தாருக்குள் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இஸ்ரேலின் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஹமாஸ் உள்ளிட்ட போராளிகள் அமைப்புகளுக்கு எச்சரிக்கைவிடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“வெளிநாடுகளில் பதுங்கி இருப்பதால் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நினைத்திட வேண்டாம். இஸ்ரேல் அதன் எதிரிகளை அழிக்கத் தயங்காது,” என்று தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

காஸாவில் நடக்கும் போரை நிறுத்த கத்தாரில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்து வரும் நேரத்தில் இஸ்ரேல் தோஹாவில் தாக்குதல் நடத்தியது.

மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் அமெரிக்காவின் ராணுவப் படைகள் அதிகம் உள்ள இடமாகக் கருதப்படும் கத்தாரில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களின் தங்குமிடத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. இதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலில் மாண்டவர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவின் முக்கிய நபரின் மகன், ஓர் உதவியாளர், மூன்று பாதுகாவல் அதிகாரிகள், கத்தார் அதிகாரி ஆகியோர் அவர்கள்.

இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து ஹமாஸ் தலைவர்கள் தப்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கத்தார்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

மேலும் திரு டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கத்தாருக்கு முன்னதாகவே தகவல் கொடுத்ததாகவும் அது கூறியது.

ஆனால் இதைக் கத்தார் மறுத்துள்ளது. தாக்குதல் குறித்த விவரங்கள் தங்களுக்கு முன்கூட்டியே கிடைக்கவில்லை என்று அது தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்கத்தார்ஹமாஸ்