முழுவீச்சில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

போர்நிறுத்த உடன்பாட்டை நீட்டிக்க டிரம்ப் மறுப்பு

முழுவீச்சில் தாக்குதல் நடத்துவோம்: ஈரான் எச்சரிக்கை

2 mins read
b0001d9c-c9a2-41f1-aa7f-9b00024ab467
2026 மே 6ஆம் தேதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் ஃபுஜைரா துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்ட ஓர் எண்ணெய்க் கப்பல். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்காவுடனான நிரந்தரப் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை முடங்கியதால், ஈரான் தனது ராணுவ அணுகுமுறையை ‘முழுவீச்சுத் தாக்குதல்’ நிலைக்கு மாற்றும் என்று அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா மறுத்துள்ள நிலையில் போர் நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முடங்கியுள்ளன. திங்கட்கிழமையுடன் (ஆகஸ்ட் 17) முடிவடைந்த 60 நாள் இடைக்காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.

அரசதந்திர முயற்சிகள் தோற்றால், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை உடைக்கத் துல்லியமான ராணுவத் தாக்குதலை ஈரான் நடத்தும் என்று அந்த ஈரானிய மூத்த அதிகாரி திங்கட்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். இருப்பினும், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவற்படையுடன் டிரம்ப் ரகசியப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் படைத் தளபதி அகமது வாஹிதியுடன் டிரம்ப் நிர்வாகம் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதன்மை நிபந்தனையாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் அமெரிக்கா சில வாரங்களுக்குள் முழுமையாக நிறைவேற்றவேண்டும் என்று ஈரானிய அதிகாரி ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைத் தன்னுடன் பகிர்ந்துகொள்ளும் ஓமானுடன் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பதிலளித்த டிரம்ப், ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஓமான் குறுக்கிட்டால் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் மோதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குறிப்பாக, ஈரானிலும் லெபனானிலும் உயிர்ச்சேதம் அதிகம்.

ஓமான், ஜோர்தான், குவைத், இஸ்ரேல், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க உள்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்து, உள்கட்டமைப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வளைகுடாப் பகுதியில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், எரிபொருள் விலை உயர்விற்குத் தயாராக இருக்குமாறு ஆகஸ்ட் 14ஆம் தேதி பேரணி ஒன்றில் டிரம்ப் ஆற்றிய உரையில் அமெரிக்க மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காபோர்