அமெரிக்காவை வருந்தச் செய்வோம்: ஈரான்

அமெரிக்காவை வருந்தச் செய்வோம்: ஈரான்

2 mins read
575d026e-e6b5-4fd9-804d-935535b63e37
ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனி காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளபோதும், அவரது உடல்நிலை பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. - படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: தன்னைத் தாக்கியதற்காக அமெரிக்காவை வருந்தச்செய்யப்போவதாக ஈரான் சூளுரைத்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து வழிமறிக்கப்படும் என்றும் அது கூறியது. அதன் காரணமாக, எண்ணெய் விலை விரைவில் அதிகரித்துவருகிறது.

மத்திய கிழக்குப் போரினால், எண்ணெய்த் தொழில்துறை வரலாற்றிலேயே, ஆகப் பெரிய விநியோகத் தடை ஏற்படக்கூடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு எச்சரித்துள்ளது.

இருப்பினும், எண்ணெய் விலைகளைக் காட்டிலும் ஈரானின் ‘கொடிய பேரரசைத்’ தோற்கடிப்பதே முக்கியம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதாரப் பாதிப்புகள் அதிகரித்துவருவதால், திரு டிரம்ப் கடும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்கிறார்.

அதோடு, அமெரிக்காவின் போர் நடவடிக்கை எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து அவர் தெளிவற்ற தகவல்களை அளித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “போரைத் தொடங்குவதற்கு எளிதாக இருந்தாலும், ஒரு சில செய்திகளை வெளியிடுவதால், அதனை வென்றுவிட முடியாது. இந்த மிகப் பெரிய தவறான கணிப்புக்கு உங்களை வருந்தச்செய்யும்வரை நாங்கள் ஓயமாட்டோம்,” என்று ஈரானியப் பாதுகாப்புத்துறைத் தலைவர் அலி லரிஜானி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

மார்ச் 8ஆம் தேதி நியமிக்கப்பட்ட ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனி சவால்விடுக்கும் கருத்து ஒன்றைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, திரு அலி லரிஜானியின் கருத்து வெளிவந்துள்ளது.

திரு மொஜ்தபாவின் தந்தையும் ஈரானின் முன்னாள் தலைவருமான திரு அலி காமெனி அமெரிக்க - இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்படும் திரு மொஜ்தபா, நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பொதுஇடத்தில் தோன்றவில்லை. பழிவாங்கக் கோரும் அவரது செய்தி, அரசாங்கத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஒருவரால் வாசிக்கப்பட்டது.

“ஹோர்முஸ் நீரிணை கட்டாயம் வழிமறிக்கப்படவேண்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்