அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரத் தயங்க மாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரத் தயங்க மாட்டோம்: ஈரான் எச்சரிக்கை

2 mins read
e09ddf39-a1d0-463b-a547-4bc13e114140
அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறியிருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

டெஹ்ரான்: அமெரிக்கா போர் நிறுத்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய ஈரான், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி தரத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

இவ்வேளையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் பலர் மேற்பட்டோர் மாண்டனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து புதிய தாக்குதலை நடத்தியுள்ளன. அதனால் அமெரிக்கா-ஈரான் சண்டை நிறுத்த ஒப்பந்தம் கேள்விக்குரியாகியுள்ளது.

ஈரானின் ஏவுகணைத் தளங்களையும் கண்ணி வெடிகளைப் புதைக்கும் படகுகளையும் தாக்கியதாக அமெரிக்க மத்திய தளபத்தியமான சென்ட்காம் அறிவித்ததைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மூன்று விழுக்காட்டுக்கும் மேல் அதிகரித்தது.

இந்த நிலையில் இரு தரப்பும் தற்காலிகச் சண்டை நிறுத்தத்தை மதித்துப் பிரச்சினையை அமைதியாகத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள பண்டார் அபாஸ் துறைமுகத்தில் இரவு முழுவதும் வெடிகுண்டுகள் சத்தம் கேட்டதாக ஈரானிய அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.

மேலும், தங்கள் ஆகாயவெளியில் நுழைந்த அமெரிக்க ஆளில்லா வானூர்தியைச் சுட்டு வீழ்த்தியதாகவும் ஒரு எஃப்-35 போர் விமானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ஈரானின் புரட்சிப் படைக் காவலர்கள் கூறினர்.

“தற்காலிகச் சண்டை நிறுத்தம் தொடங்கியதிலிருந்து அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவம் தொடர்ந்து சட்டவிரோதமான, நியாயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் அதன் நடவடிக்கை மேலும் அதிகரித்துள்ளது,” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் கூறினார்.

“ஈரான் எந்தவொரு தீமைகளுக்கும் பதிலளிக்காமல் இருக்காது, ஈரானைப் பாதுகாக்கத் தயங்க மாட்டோம்,” என்றும் அவர் எச்சரித்தார்.

இந்நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஈரானைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவம் விளக்கமளித்துள்ளது.

“ஈரானியப் படைகளால் ஏற்பட்ட மிரட்டல்களிலிருந்து எங்களுடைய படையினரைப் பாதுகாக்கத் தென்ஈரான்மீது இரவு முழுவதும் அமெரிக்கப் படைகள் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின,” என்று அமெரிக்க மத்திய தளபத்தியத்தியமான சென்ட்காமின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஈரானின் ஏவுகணைத் தளங்களையும் கண்ணி வெடிகளைப் புதைக்கும் முயற்சியில் ஈடுபட்ட படகுகளையும் மட்டுமே குறி வைத்ததாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்