சோல்: தென்கொரிய அதிபரின் அணுவாயுதக் குறைப்பு கோரிக்கையை முற்றாக நிராகரித்துள்ள வடகொரியா, தனது நாட்டின் அணுவாயுதங்களை என்றென்றும் கைவிடப்போவதில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வடகொரியா ஏற்கெனவே சட்டபூர்வமாகத் தன்னை ஓர் அணுவாயுத நாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. நாட்டின் அணுவாயுதக் குவியல் நிரந்தரமானது என்றும், அதனை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது என்றும் அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங், வடகொரியாவின் ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, இறுதியில் கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதங்களற்ற பகுதியாக மாற்ற விரும்புவதாகத் தெரிவித்தார்
இதற்குப் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சோ சொன் ஹுவி பதிலளித்துள்ளார்.
“எக்காலத்திலும் அணுவாயுதங்களைத் தற்காத்து வைப்பதற்கான வடகொரியாவின் விருப்பத்தை மிகக் கடுமையான குரலில் நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டின் அணுவாயுதத் தகுதிநிலை எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற முடியாதது என்றும் அது என்றென்றும் மாறாமல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடகொரியாவுடன் முடங்கிக் கிடக்கும் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயன்று வரும் தென்கொரிய அதிபர் லீ இதுகுறித்து ஐநா சபையில் பேசினார். வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான அடித்தளத்தை தென்கொரியா அமைக்கும் என்றார் அவர்.
