சோல்: தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கு விதிக்கப்படும் தீர்ப்பை அந்நாட்டின் ஆளும் மக்கள் சக்திக் கட்சி (People Power Party) மதிக்கும் என்று அதன் தலைவர் குவியோன் சியோங் டோங் கூறியுள்ளார்.
தீர்ப்பு தமது கட்சிக்குச் சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமது கட்சி அதை மதிக்கும் என்ற ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) நாடாளுமன்றத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு குவியோன் குறிப்பிட்டார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு நெருக்குதல் அளிப்பதாகக் கூறப்பட்டது; தீர்ப்பு யூனுக்கு எதிராக வந்தால் நீதிமன்றத்துக்கு எதிராகச் செயல்படுமாறு அவர்கள், யூன் ஆதரவு ஆர்ப்பாட்டக்கார்களைக் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரு குவியோன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, தீர்ப்பை விரைவில் வழங்குமாறு தென்கொரிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்குக் குரல் கொடுத்திருக்கிறது. தீர்ப்பைத் தெரிந்துகொள்ள நாட்டைக் காக்க வைப்பது பொறுப்பற்ற செயல் என்றும் இச்செயல் சமூகத்தில் இருக்கக்கூடிய விரிசல்களை மோசமாக்குகின்றன என்றும் அக்கட்சி திங்கட்கிழமை (மார்ச் 17) சாடியது.
அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் யூனின் வழக்கில் இவ்வாரம் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

