கடுமையான பதிலடி தருவோம்: ஐரோப்பிய நாடுகளுக்குப் புட்டின் எச்சரிக்கை

கடுமையான பதிலடி தருவோம்: ஐரோப்பிய நாடுகளுக்குப் புட்டின் எச்சரிக்கை

1 mins read
e92b1c94-2094-4110-b01f-5f0b6caeda24
ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்குத் தீவான சாக்கலின் பகுதியில் ராணுவப் பயிற்சிகளை அதிபர் விளாடிமிர் புட்டின் பார்வையிட்டார். - படம்: இபிஏ
Google News Preferred Icon

மாஸ்கோ: தங்களது வணிகக் கப்பல்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்து வைத்தால் கடுமையான பதிலடி தரப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவின் ‘நிழற்படைக் கப்பல்கள்’ மீதான அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தி, நூற்றுக்கணக்கான கப்பல்கள்மீது தடைகளை விரிவுபடுத்தி, சில கப்பல்களையும் அவற்றின் ஊழியர்களையும் சோதனைகளுக்காகக் காவலில் வைத்துள்ள நிலையில் அதிபர் புட்டினின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தடைகளிலிருந்து தப்ப முயல்வதாகச் சந்தேகிக்கப்படும் கப்பல்களுக்கு எதிராகக் கடுமையான கடல்சார் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்து வருவதாகச் சில ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், “இது கடற்கொள்ளைக்கும் கொள்ளையடிப்பதற்கும் சற்றும் குறைந்தது இல்லை. உண்மையிலேயே அது நடைமுறைப்படுத்தப்பட்டால், நாங்களும் அதேபோன்று பதிலடி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்,” என்று திரு புட்டின் கூறியதாக ரஷ்ய அரசு ஊடகமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது.

அந்தப் பதிலடியானது ரஷ்யக் கப்பல்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடற்பகுதியோடு மட்டும் நின்றுவிடாது என்றும் தாங்கள் அவசியமானது, பொருத்தமானது என்று கருதும் இடங்களில் எல்லாம் அது நிகழும் என்றும் அதிபர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தொலைதூரக் கிழக்குத் தீவான சாக்கலின் பகுதியில் ராணுவப் பயிற்சிகளைத் திரு புட்டின் பார்வையிட்டார்.

நேட்டோ அமைப்பு ஆசிய பசிபிக் வட்டாரத்திற்குள் ஊடுருவி வருவதாகவும், ஆர்க்டிக் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

குறிப்புச் சொற்கள்