அமெரிக்கா வரியை அமலாக்கினால் பதிலடி தருவோம்: ஐரோப்பிய ஒன்றியம்

2 mins read
079e4f0f-c52b-4864-bd0f-e9f19bbdc205
ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களைப் பாதுகாக்க உறுதியாக இருப்போம் என்று அதன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் கூறியுள்ளார். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

பிரசல்ஸ்: ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து ஐரோப்பிய பொருள்களுக்கு அமெரிக்கா 30 விழுக்காடு வரியை விதித்தால் அதற்கு தக்க பதிலடித் தரத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 12ஆம் தேதி தெரிவித்தது.

ஐரோப்பிய நாடுகளின் நலன்களை அமெரிக்க வரி விதிப்பிலிருந்து பாதுகாக்க அந்த நடவடிக்கை இடம்பெறும் என்று ஒன்றியம் குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அண்மைய வரி விதிப்பு அறிவிப்பு அதன் ஆகப்பெரிய வர்த்தகப் பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இருந்தாலும் தீவிர பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவுடனான வர்த்தகப் போரைத் தவிர்க்க முடியும் என ஒன்றியம் நம்புகிறது.

ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகக் கொள்கைகளை கையாளும் ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகக் குழுவின் தலைவரான டாக்டர் உர்சுலா வோன் டெர் லெயன், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க வரிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்கப் போவதாகவும் அவர் கூறினார்.

“ஐரோப்பிய நலன்களைப் பாதுகாக்க ஆன அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேவை ஏற்பட்டால் பதிலடி நடவடிக்கைகளை எடுப்போம். ஐரோப்பாவுக்குள் நுழையும் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிக்கப்படும்,” என்றார் அவர்.

ஜூலை 14ஆம் தேதி பிரசல்சில் ஐரோப்பிய வர்த்தகத் தலைவர்கள் சந்திப்பதற்கு ஒரு நாள் முன்பு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பியத் தூதர்கள் கலந்து பேசவிருக்கின்றனர்.

அப்போது, எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்கா விதித்துள்ள வரிக்குப் பதிலடியாக அமெரிக்கப் பொருள்களுக்கு 21 பில்லியன் யூரோ வரிகளை விதிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அமெரிக்காவிற்கு எதிராக பழிவாங்குவதைத் தவிர்த்து வருகிறது. இருப்பினும் அது இரண்டு வரி விதிப்பு தொகுப்புகளைத் தயாரித்துள்ளது. அவை மொத்தமாக 93 பில்லியன் யூரோ மதிப்புள்ள அமெரிக்க பொருள்களைப் பாதிக்கலாம்.

டாக்டர் வோன் டெர் லெயனின் நிலையில் ஐரோப்பிய நாடுகள் உறுதியாக நிற்கின்றன.

இவ்வேளையில் ஜெர்மானிய பொருளியல் அமைச்சர் கேத்தரினா ரெய்ச், பேச்சுவார்த்தையில் நடைமுறை சாத்தியமான முடிவு ஏற்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஐரோப்பிய பொருள்களுக்கு 30 விழுக்காடு வரி அமலுக்கு வரும் என்று மிரட்டியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்