இடைக்கால அரசுக்கு எக்காலத்திலும் துணை நிற்போம்: பங்ளாதேஷ் ராணுவ தளபதி உறுதி

2 mins read
ad3d9244-fa16-418e-b576-bc3f56517b9d
பங்ளாதேஷ் ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமான். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷில் முக்கிய சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ள முனைவர் முகமது யூனுஸ் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசுக்கு ராணுவம் அனைத்து வகையிலும் துணை நிற்கும் என அந்நாட்டு ராணுவத் தளபதி வக்கார் உஸ் ஜமான் உறுதியளித்துள்ளார்.

அந்நாட்டுப் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பங்ளாதேஷை விட்டு வெளியேறியதையடுத்து, அங்கு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த 18 மாதங்களுக்குள் பங்ளாதேஷில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்ளாதேஷில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஷேக் ஹசினா தலைமையிலான அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்பு அமல் படுத்தியது. இதனை எதிர்த்து இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அந்நாட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை நடத்திய மாணவர்கள் மீது அந்நாட்டு ராணுவம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், போராட்டம் கலவரமாக வெடித்தது.

15 ஆண்டுகளாக பங்ளாதேஷில் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்டை நாடான இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

நோபெல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் தனது முழு ஆதரவைக் பெற்றிருப்பதாகவும் ராணுவத்தை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிப்பதற்கான பாதையை அந்த அரசாங்கம் கோடிட்டுக் காட்டியதாகவும் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) தலைநகர் டாக்காவில் உள்ள தனது அலுவலகத்தில் ராய்ட்டர்சிடம் அளித்த நேர்காணலில் திரு வக்கார் உஸ் ஜமான் கூறினார்.

“நான் யூனுசுக்குப் பக்கபலமாக நிற்பேன். என்ன நடந்தாலும், அவர் தனது கடமையை நிறைவேற்ற நான் உறுதுணையாக இருப்பேன்,” என்றும் திரு ஜமான் தெரிவித்தார்.

170 மில்லியன் மக்கள் வசிக்கும் பங்ளாதேஷில் சுதந்திரமாகவும் நியாயமான முறையிலும் தேர்தல் நடத்துவதற்கு வழி வகுக்கும் நீதித்துறை, காவல்துறை, நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் தேவையான அத்தியாவசியச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்போவதாகத் திரு யூனுஸ் அந்நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும், “நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டக் கால அவகாசம் தேவை. கிட்டத்தட்ட ஒன்றிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும். மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்,” என்றும் திரு யூனுஸ் கூறினார்.

அதையொட்டி திரு ஜமானிடன் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஜனநாயக செயல்முறைக்குள் பங்ளாதேஷ் நுழைய வேண்டியதற்கு அத்தகைய கால அவகாசம் தேவை என்றார்.

முனவர் யூஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கு நல்ல உறவு இருக்கிறது என்றார் திரு ஜமான்.

“நாம் ஒன்றாகச் செயல்பட்டால், தோல்வியடைய மாட்டோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்