சோல்: உக்ரேனுடனான பிரச்சினையில் ரஷ்யாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் மறுவுறுதிப்படுத்தியிருக்கிறார்.
ரஷ்யா எடுக்கும் அனைத்துத் தீர்வுகளுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
ரஷ்யத் தூதரைச் சந்தித்தபோது கிம் ரஷ்யாவுக்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தியதாக அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
மூன்று நாள் பயணம் மேற்கொண்டு வடகொரியா சென்றுள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், அங்கு இருதரப்பு உத்திபூர்வ நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட பேச்சு நடத்தினார்.
உக்ரேனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு துருப்புகளையும் ஆயுதங்களையும் வடகொரியா வழங்கி வருகிறது.
போரில் முன்னேற விரும்பும் ரஷ்யாவுக்குக் கூடுதல் ராணுவ உதவி வழங்க வடகொரியா உறுதியளித்துள்ளது.
கிழக்கு கடலோர நகரமான வன்சானில் லவ்ரோவை திரு கிம் சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்து பேசினர்.
கடந்த ஆண்டு கையெழுத்திடப்பட்ட பங்காளித்துவ ஒப்பந்தத்தின்கீழ் இருதரப்பு ஒத்துழைப்புக்கு இரு அமைச்சர்களும் உறுதி கூறினர். பரஸ்பர தற்காப்பு உடன்பாடும் அவற்றில் அடங்கும்.

