மியன்மார்: மியன்மாரில் நடைபெறும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஆயத்தமாவதாகக் கூறிய அந்நாட்டு மக்கள், எனினும் மனதார வாக்களிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.
ராணுவ ஆட்சிக்குழுவின் அதிகார வளையத்திற்குள் கடந்த 2021ஆம் சென்றது மியன்மார். இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தேர்தலை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) சந்திக்கின்றது மியன்மார்.
இத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறும் என்று மியன்மார் ஆட்சியாளர்கள் உறுதிகூறி வரும் வேளையில், இதை நம்புவதற்கில்லை என்று மியன்மார் நாட்டவர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இத்தேர்தல் மக்களுக்கானது அன்று; ராணுவ ஆட்சியாளர்களுக்கானது என்று, கணிசமானோர் கருத்து தெரிவித்து வருவதாக, ராய்ட்டர்ஸ், கார்டியன் உள்ளிட்ட அனைத்துலக ஊடகச் செய்திக் குறிப்புகள் தெரிவித்தன.
இதற்கிடையே, மியன்மார் நடத்தும் இத்தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள கடும் அதிருப்திகள் குறித்துக் கருத்துரைத்த மியன்மார் ராணுவ ஆட்சிக்குழுவின் பேச்சாளர் ஸாவ் மின் துன், ‘‘இத்தேர்தல் அனைத்துலகச் சமூகத்திற்காக நடத்தப்படவில்லை. மியன்மார் மக்களுக்காக நடத்தப்படுகிறது,’’ என்று கூறினார்.
மேலும், தேர்தல் நடத்தப்படுவது குறித்து அரசாங்கத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரிப்பதாகக் கூறியுள்ளது மியன்மார் ஆட்சிக்குழு.
மூன்று கட்டமாக நடைபெறவுள்ளது மியன்மார் தேர்தல்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு உட்பட ஏராளமான மேற்கத்திய அரசாங்கங்களும் மியன்மார் தேர்தலைப் போலியான தேர்தல் என்று குறைகூறியுள்ள நிலையில், மியன்மாருக்குத் தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டும் சீனா மட்டும் இத்தேர்தலை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நிலைத்தன்மையை நோக்கிய மியன்மாரின் பயணத்தில் இந்த வாக்களிப்பு முக்கியப் பங்கு வகிக்கும் என்று சீனா கூறியுள்ளது.
இதற்கிடையே நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல் பல ஆண்டுகளாக நிலவும் அசாதாரண சூழல், அமைதியின்மை, மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் ஆகியவற்றைப் பெற்றுதருமா என்ற பெருங்கவலையில் மூழ்கியுள்ள மியன்மார்வாசிகள், பேரளவில் இத்தேர்தலில் வாக்களிக்க வருவர் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சுமார் 50 மில்லியன் மக்கள் வசிக்கும் மியன்மார் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய தேர்தலுக்கான வாக்கெடுப்பு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி காலை 7.30 மணிக்குத் தொடங்கும்.
அமைதிக்கான நோபெல் பரிசு வென்றவரும் தற்போது வரை சிறைவாசம் அனுபவித்து வருபவருமான மியன்மாரின் திருவாட்டி ஆங் சான் சூச்சி, 80, தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்தனர்.
ஆனால் 2021ஆம் ஆண்டில் ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

