கோலாலம்பூர்: நாட்டில் சகிப்புத்தன்மையற்ற இனவாத உணர்வுகளையும் வெறுப்புப் பிரசாரங்களையும் எதிர்கொள்ளக் கோபத்தைக் காட்டுவது சரியான வழிமுறை அல்ல என்றும் மாறாகப் பொறுமை, விவேகம் மற்றும் நற்பண்புகள் மூலம் அவற்றுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
பல இன, கலாசார மக்களைக் கொண்ட மலேசியச் சமூகம் உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து வரும்போதிலும், சமுதாயத்தைப் பிளவுபடுத்த முயலும் இன, சமய வெறுப்புணர்வுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நாடு இன்னும் விதிவிலக்காக இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சமயத் தலைவர்களுக்கான அனைத்துலக உச்சநிலை மாநாட்டின் ஒரு பகுதியாகச் சமயத் தலைவர்கள் மற்றும் அறிஞர்களை நேரில் சந்தித்துக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட பிரதமர் அன்வார், சவால்கள் நிறைந்த ஒரு பல்லினச் சமூகத்தை நிர்வகிப்பது எளிதான காரியமல்ல என்றார்.
இருப்பினும், சமுதாயங்களுக்கிடையிலான பரஸ்பர மரியாதை, மிதவாதப் போக்கு மற்றும் புரிதல் ஆகியவையே நாட்டின் நிலைத்தன்மைக்கும் முன்னேற்றத்துக்கும் முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் நடைபெற்ற திருக்குர்ஆன் எரிப்புச் சம்பவங்களை உதாரணம் காட்டிய பிரதமர், அவற்றுக்கு மலேசியா உணர்ச்சிவசப்பட்டுப் பதிலளிக்காமல், நேர்மறையான வழியையே தேர்ந்தெடுத்ததாகக் கூறினார்.
அதற்குப் பதிலாக, பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு மில்லியன் திருக்குர்ஆன் பிரதிகளை அச்சிட்டு உலகளவில் விநியோகிக்கும் முயற்சிகளை மலேசியா விரிவுபடுத்தியதாக அவர் நினைவுகூர்ந்தார்.
மேலும், உலகளாவிய சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் இஸ்லாமியப் புரிதலை வலுப்படுத்தவும் மனிதப் பண்புநெறிகள் மற்றும் அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கவும் மலேசியா எப்போதும் தயாராக இருப்பதாக அன்வார் தெரிவித்தார்.

