கோலாலம்பூர்: மலேசியா முழுவதிலும் உள்ள 528 தமிழ்ப்பள்ளிகளின் முழுமையான விவரங்கள், தரவுகள், அண்மையச் செய்திகளை ஒரே குடையின் கீழ் இணைக்கும் ‘எஸ்ஜேகேடி கனெக்ட்’ (SJKT CONNECT) எனும் மின்னிலக்கத் தரவுத்தளம் கோலாலம்பூர் தம்புசாமிப் பிள்ளை தமிழ்ப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 27) அதிகாரபூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.
மலேசியத் தமிழ் அறவாரியமும், இந்திய அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்பான ‘ஏஸ்’ (ACE) அமைப்பும் இணைந்து இத்தளத்தை உருவாக்கியுள்ளன.
11 மாநிலங்கள், 122 நாடாளுமன்றத் தொகுதிகளில் செயல்பட்டு வரும் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் தேவைகள், வசதிக் குறைபாடுகள், சவால்களை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் துல்லியமாக அடையாளம் காணும் சமூகப் பாலமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றக் குறிப்புகள், ஊடகச் செய்திகள் பள்ளி வாரியாகத் தொகுக்கப்படுவதுடன், ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று மொழிகளில் சுயவிவரப் பக்கங்களும் உருவாக்கப்படவுள்ளன.
“இது தமிழ்ப்பள்ளிகளின் தற்காலத் தேவைகளுடன் எதிர்காலத் தலைமுறையினரின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் நீண்டகாலத் திட்டமாக அமையும்,” என்று இத்தளத்தின் அறிமுக விழாவில் பேசிய தமிழ் அறவாரியத்தின் தலைவர் மனோகரன் மாரிமுத்து கூறினார்.
“தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு. நம்பகத்தன்மைமிக்க தரவுகள் மூலமே தீர்வை நோக்கி நகர முடியும்,” என்று அறவாரியத்தின் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் வேணுகோபால் குறிப்பிட்டார்.
நிகழ்வில் இடம்பெற்ற சிறப்புக் கலந்துரையாடலில், தமிழ்ப்பள்ளிகளின் நில உரிமைப் பிரச்சினைகள், குறைந்த மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பள்ளிகளின் இடமாற்றம், நவீன ஆய்வகக் கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
