ஜின்ஹுவா: வெயில் கொளுத்தும் வசந்த கால நாளில் கிழக்கு சீன நிறுவனம் ஒன்றில் ஊழியர்கள் கிறிஸ்துமஸ் மர அலங்காரத்தில், வழியும் வியர்வையை துடைத்தவாறு, பணிபுரிகின்றனர்.
ஸிஜியாங் மாநிலத்தில் உள்ள மற்ற பல நிறுவனங்களைப்போல் இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருள்களும் ஏற்றுமதியை நம்பியே இருக்கின்றன. இந்த ஏற்றுமதித் துறைதான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிகப்படியான வரி விதிப்பால், தள்ளாடும் உலகப் பொருளியலைப்போல், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8ஆம் தேதி அமெரிக்க அதிபர் சீனப் பொருள்கள் மீதான வரியை முதலில் 104 விழுக்காடு என உயர்த்தினார். பின்னர் அதையே 125 விழுக்காடு என்றும் பின்னர் ஒட்டுமொத்த வரி விதிப்பு 145 விழுக்காடாக இருக்கும் என்று அறிவித்தார்.
“முதலில் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை இழந்து கவலையுடன் இருந்தனர். “ஆனால் கடந்த இரு நாட்களாக நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். சீனாவை இப்படித் துன்புறுத்தலாகாது என்ற நிலைக்கு வந்துள்ளோம்.
இந்தக் கடினமான காலகட்டத்தை கடந்த செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று அந்தக் கிறிஸ்துமஸ் மரம் செய்யும் ஆலையில் தலைமைப் பொறுப்பில் உள்ள திருவாட்டி ஜெசிக்கா குவோ கூறினார்
இந்தப் பிரச்சினையில் சீன அரசும் தனது பங்குக்கு அமெரிக்கப் பொருள்களுக்கு எதிரான வரியை 125 விழுக்காட்டுக்கு உயர்த்தி அமெரிக்க வரி விதிப்பை எதிர்த்துப் போரிடும் மனநிலையிலேயே உள்ளது.
அமெரிக்கா, சீனாவுக்கு இடையிலான இந்தப் பதிலுக்குப் பதில் நடவடிக்கை எடுக்கும் போக்கு அவ்விரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை 80 விழுக்காடு வரை குறைக்கலாம் என்று உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

