வாஷிங்டன்: சியாட்டல் பகுதிக்கு அருகே உள்ள கடற்பரப்பில் ‘கில்லர் வேல்’ வகையைச் சேர்ந்த பெண் திமிங்கிலம் மாண்டுபோன அதன் குட்டியைச் சுமந்தபடி சுற்றுவதாக அமெரிக்கக் கடல்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
‘தலேக்கா’ என்றும் ‘ஜே35’ என்றும் அழைக்கப்படும் அந்தத் திமிங்கிலம் மாண்ட குட்டியைச் சுமந்தபடி புத்தாண்டு நாளில் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
வாஷிங்டன் மாநில அரசுக்குச் சொந்தமான திமிங்கில ஆய்வு நிலையம், ஜனவரி 2ஆம் தேதி இன்ஸ்டகிராமில் இத்தகவலை வெளியிட்டது.
தலேக்கா ஏற்கெனவே 2018ஆம் ஆண்டும் இதேபோல், மாண்ட அதன் குட்டியை 17 நாள்களுக்குச் சுமந்தபடியே சுற்றியதாக அது குறிப்பிட்டது.
அப்போது தலேக்கா சில நேரங்களில் அந்தக் குட்டியின் உடலைத் தன் மூக்கால் மெதுவாகத் தள்ளியதுடன் சில நேரங்களில் வாயால் அதைக் கவ்விச்சென்றதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கூறின.
ஆவணங்களின்படி தலேக்கா இதுவரை ஈன்ற நான்கு குட்டிகளில் இரண்டை இழந்துவிட்டது துயரத்துக்குரியது என்று திமிங்கில ஆய்வு நிலையம் கூறியது.
தலேக்கா அண்மையில் ஈன்று, பறிகொடுத்த குட்டித் திமிங்கிலம், பெண் என்றும் அது குறிப்பிட்டது.
பொதுவாகவே திமிங்கிலங்கள் உலகின் அறிவார்ந்த விலங்கினங்களில் ஒன்றாக விளங்குவதாகக் கூறும் விஞ்ஞானிகள், அவற்றுக்கு விழிப்புணர்வு உண்டு என்றும் துக்கம் போன்ற உணர்வுகளை அவை வெளிப்படுத்தக்கூடியவை என்றும் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
‘கில்லர் வேல்’ அல்லது ‘ஆர்கா’ வகைத் திமிங்கிலங்கள் அமெரிக்காவில் அருகிவரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.