பேங்காக்: இந்தோனீசியாவின் கரையோரங்களில் திமிங்கிலச் சுறாக்கள் காணப்படுவதற்கான ரகசியம் பற்றியும் ஆண்டு முழுவதும் அவை ஒன்றுகூடும் இரண்டு முக்கிய இடங்கள் பற்றியும் அண்மைய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிடப்பட்டது.
அரியவகை திமிங்கில வகை சுறாக்கள் கடல் தூய்மைக்கேடு, சுற்றுலா ஆகியவற்றாலும் கப்பல்கள் மோதியும் அழிந்துவருவதாக ஆய்வு சுட்டியது.
அதை முன்னிட்டு இந்தோனீசியாவின் வளைகுடாப் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் அந்த வகை சுறாக்களைப் பாதுகாப்பதற்கான பரிந்துரைகளையும் ஆய்வு முன்வைக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் இந்தோனீசியாவின் கடற்பகுதிகளுக்கு அருகில் காணப்பட்ட கிட்டத்தட்ட 70 திமிங்கிலச் சுறாக்கள் கண்காணிக்கப்பட்டன. அந்தச் சுறாக்கள் 13 வெவ்வேறு நாடுகளைக் கடந்துசென்றதாக ஆய்வு சுட்டுகிறது.
கடல் அறிவியல் எல்லை என்ற ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்ட கண்டுபிடிப்புகள் இந்தோனீசியாவின் இரண்டு வளைகுடாப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் திமிங்கிலச் சுறாக்கள் காணப்படுவதைக் குறிப்பிட்டது.
சுறாக்களை உண்ணக்கூடிய மற்ற பெரிய மீன்களிடமிருந்து அங்குப் பாதுகாப்பு கிடைப்பதாலும் குறிப்பிட்ட அந்த வளைகுடாப் பகுதிகளில் உணவு கிடைப்பதாலும் திமிங்கிலச் சுறாக்கள் அங்கு வட்டமிடுவதாக ஆய்வுச் சுட்டியது.

