சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது குறித்து இன்னும் முடிவாகவில்லை: நாசா

2 mins read
346652cd-9fd5-4139-b343-f349535a4c7b
விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ். - படம்: ஏஎஃப்பி

இரண்டு மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாமல் விண்வெளியில் சிக்கியிருக்கும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸையும் அவருடைய சக வீரரையும் மீட்கும் வழி குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் சென்ற அதே ‘ஸ்டார்லைன்’ விண்கலத்தில் திரும்புவது சிறந்தது என்றாலும், அது பாதுகாப்பானதில்லை எனத் தெரிய வந்தால் மாற்று விண்கலத்தில் அழைத்துவர முடிவெடுக்கப்படலாம் என நாசா தெரிவித்துள்ளது.

அதற்கான சிறந்த சாத்தியக் கூறுகளில் ஒன்று, செப்டம்பரில் மேற்கொள்ளப்படவுள்ள மற்றொரு திட்டத்தின்போது அனுப்பப்படும் விண்கலத்தில் அவர்களைப் பூமிக்கு அழைத்து வருவது என்றது நாசா.

ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அத்திட்டம் முடிந்த பின்னரே அவர்கள் பூமிக்குத் திரும்ப முடியும். அப்படி முடிவெடுக்கப்பட்டால், எட்டு நாள்கள் எனத் திட்டமிடப்பட்ட அவர்களது பயணம் எட்டு மாதங்களாக நீட்டிக்கப்படும்.

அத்திட்டத்துக்கு எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் ‘க்ரூ டிராகன்’ எனும் விண்கலம் பயன்படுத்தப்பட உள்ளது. அதில் நான்கு பேர் அனுப்பப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் இரு இருக்கைகள் காலியாக வைத்து அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமையைக் கூர்ந்து ஆராய்ந்து, சரியான இறுதி முடிவை எடுக்க இன்னும் ஒரு வாரமோ அதற்கும் மேலோ அவகாசம் தேவைப்படலாம் என நாசா தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 5ஆம் தேதி விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் அவருடைய சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இரண்டு மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் அவர்களுக்குத் தேவையான உணவு, ஆடை உள்ளிட்ட பொருள்களை வழங்க ஸ்பேஸ்-எக்ஸ் விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்