வாஷிங்டன்: அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் உள்ள மினியபொலிஸ் நகரில் சோமாலியர்களால் நடத்தப்பட்டுவந்த குழந்தைகள் நல மையத்தில் ஊழல் நடந்துள்ளது பற்றிய 43 நிமிடக் காணொளி கடந்தவாரம் சமூக ஊடகத்தில் பரவலாக பார்வையிடப்பட்டது.
மில்லியன் கணக்கில் மக்கள் அதனைப் பார்த்தபிறகு, அதிபர் டிரம்ப்பின் அரசாங்கத்துக்கும் செய்தியாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சமூக ஊடக படைப்பாளர்களுக்கும் ஏற்பட்டுள்ள பிணைப்பு பலரையும் குறைகூறவைத்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியுரிமை கோருவோருக்கு எதிரான அரசாங்கக் கொள்கைகளுக்கு ஆதரவாக பல சமூக ஊடகப் போராளிகள் இதுபோன்ற காணொளிகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
கிறிஸ்துமஸ் விழாவுக்கு மறுநாள் (டிசம்பர் 26) சமூக ஊடகங்களில் வெளிவந்த அந்தக் குறிப்பிட்ட காணொளி, திரு நிக் ஷர்லி என்பவரால் எடுக்கப்பட்டது. அதில் பெருமளவில் அரசாங்க நிதியைப் பெற்று வெளிநாட்டினரால் நடத்தப்படுகின்ற பல குழந்தைகள் நல மையங்களில் ஊழல் நடந்துள்ளதாக அவர் செய்தி வெளியிட்டிருந்தார்.
இதுபோல் அரசாங்கக் கொள்கைகள் சார்பான காணொளிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் பதிவிட்டுவருகிறார்.
அமெரிக்காவின் பிரதான செய்தி ஊடகங்களால் இத்தகைய காணொளிகளின் உண்மைத் தன்மையை உறுதிசெய்ய முடியவில்லை. இருப்பினும் ஆளும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவு இதுபோன்ற காணொளிகளுக்குப் பெருகி வருகிறது.
பல உயரிய விருதுகள் பெற்ற செய்தியாளர்களைவிட திரு ஷர்லி மிகச் சிறந்த ஊடகவியலாளராக செயலாற்றியுள்ளார் என்று துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் டிசம்பர் 27ஆம் தேதி தனது எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுப் பாராட்டியுள்ளார்.

