வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (பிப்ரவரி 26) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது முதல் அமைச்சரவை சந்திப்பை நடத்தினார்.
அப்போது ராய்ட்டர்ஸ், ஏபி மற்றும் சில முன்னணி செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் அனுமதி வழங்கப்படவில்லை.
இருப்பினும் ஏபிசி, நியூஸ்மேக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆக்சியோஸ், பிளேஸ், புளூம்பர்க் உள்ளிட்ட நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு அமைச்சரவை சந்திப்பு நிகழ்வில் அனுமதி வழங்கப்பட்டது.
பிப்ரவரி 25ஆம் தேதி டிரம்ப் நிர்வாகம் ஊடகம் தொடர்பாகப் புதிய கொள்கையை அறிவித்தது. ஓவல் அலுவலகம் உள்ளிட்ட சிறிய இடங்களில் நடக்கும் சந்திப்புகளுக்கு எந்தெந்த ஊடகங்களுக்கு அனுமதி வழங்குவது என்பதை வெள்ளை மாளிகை முடிவு செய்யும் என்று அறிவித்தது.
புதிய கொள்கையின் தொடக்கமாக இது பார்க்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வெள்ளை மாளிக்கைக்கான செய்தியாளர்கள் மன்றம் உள்ளது. அதில் இருக்கும் செய்தியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கப்படும். ஏபி, ராய்ட்டர்ஸ், புளூம்பர்க் ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள்.
வெள்ளை மாளிகைச் செய்திகளை பல ஆண்டுகளாக ராய்ட்டர்ஸ் எழுதி வருகிறது. தற்போது அதற்கு அனுமதி வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முக்கிய ஊடக நிறுவனங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லியவிட் தெரிவித்துள்ளார்.

