தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரங்கம்மைப் பரவல் உலக சுகாதார நெருக்கடியாக அறிவிப்பு

2 mins read
a79c876f-8442-4523-9dd9-72a944317b99
தற்போது குரங்கம்மை ஆப்பிரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஆப்பிரிக்க நாடுகள் சிலவற்றில் குரங்கம்மை பரவல் அதிகரித்துள்ளது. அதனால் உலகச் சுகாதார நிறுவனம் குரங்கம்மையை உலக சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது.

வேகமாகவும் எளிதாகவும் பரவக்கூடியது குரங்கம்மை. காங்கோ நாட்டில் ஏற்பட்ட முதல் நோய்ப்பரவலில் மட்டும் கிட்டத்தட்ட 450 பேர் மாண்டனர்.

தற்போது குரங்கம்மை ஆப்பிரிக்காவின் மத்திய மற்றும் கிழக்கு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.

குரங்கம்மையின் புதிய திரிபு வகை எவ்வளவு வேகமாக பரவக்கூடியது, அது எவ்வளவு கடுமையாக உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பது குறித்து மிகுந்த கவலைத் தெரிவித்துள்ளது உலகச் சுகாதார நிறுவனம்.

ஆப்பிரிக்காவிலும் அதை தாண்டியும் குரங்கம்மை பரவல் இருக்கும் என்பதால் அது மிகுந்த வருத்தம் தருவதாக உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கேப்ரியெசஸ் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த நோய்ப்பரவலைத் தடுக்கலாம் பல உயிர்களை காப்பாற்றலாம் என்றும் அவர் கூறினார்.

குரங்கம்மை கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் செல்லக்கூடாது. அவர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது.

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி காய்ச்சல் இருக்கும், தோலில் வீக்கங்கள், அரிப்புகள் இருக்கும்.

நோய்ப்பரவலை தடுப்பூசிகள் மூலம் தடுக்கலாம். இருப்பினும் தடுப்பூசிகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள மக்களுக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டும்தான் போடப்படும்.

குரங்கம்மையில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. கிலேட் 1, கிலேட் 2 ஆகும்.

2022ஆம் ஆண்டு முதல்முறையாக குரங்கம்மை தொடர்பாக சுகாதார நெருக்கடி அறிவிக்கப்பட்டது. அது கிலேட் 2 வகை கிருமியாகும். அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் சற்று குறைவு தான்.

ஆனால் இப்போது பரவுவது கிலேட் 1 வகை கிருமி ஆகும். அதனால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் மாண்டனர். தற்போது அந்த எண்ணிக்கை 10 விழுக்காட்டுக்கு மேல் கூடுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கிலேட் 1 வகை கிருமியில் இருந்து மற்றொரு கிருமி உருவானது. அது கிலேட் 1பி என்று வகைப்படுத்தப்பட்டது. அது வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என்றும் அது ஆபத்தான ஒன்று என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜூலை 2022ஆம் ஆண்டு தரவுகள்படி குறைந்த ஆபத்துள்ள கிலேட் 2 வகை குரங்கம்மை கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவின. ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் அவை பரவியுள்ளன

கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரிலும் 30க்கும் மேற்பட்டவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து 10 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் குறைந்த பாதிப்பே இருந்ததாக அமைச்சு கூறியது. மேலும், சிங்கப்பூரில் வீரியமிக்க குரங்கம்மைத் திரிபு பரவும் வேகம் சற்று குறைவுதான் என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்