மியன்மாரில் அவசரகால நெருக்கடி, உடனடி நிதி ஆதரவு தேவை: உலக சுகாதார நிறுவனம்

2 mins read
41ef10ca-f5fb-403b-89bd-e90cb0abc87b
மியன்மாரில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு உதவும் சுகாதார ஊழியர். - படம்: இபிஏ

ஜெனிவா: மியன்மார் நிலநடுக்கம் அவசரகால நெருக்கடி நிலை என்றும் அங்கு உயிர்களைக் காப்பாற்றவும் அடுத்த 30 நாள்களில் நோய்ப் பரவல் இல்லாமல் பாதுகாக்கவும் உடனடியாக அமெரிக்க டாலர் 8 மில்லியன் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழப்பும் அதிர்ச்சி தரும் வகையில் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அத்துடன், அந்நாட்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வசதியும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நிலையில் இல்லாமல் இருப்பதால் நோய்ப் பரவல் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக அது தெரிவித்தது. மேலும், அந்நாட்டில் நிலவும் சூழலில் நிலநடுக்கத்தால் நோய் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்றும் அது விளக்கியது. “மியன்மாரில் நிலவும் நெருக்கடி நிலை சூழல் மிக உயர்ந்த நிலையான மூன்றாம் கட்ட நெருக்கடி நிலை,” என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. இதை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாக நிதியுதவி வேண்டி அது அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. மியன்மாரில் முதற்கட்டமாக மண்டலே நகருக்கு அருகில் ரிக்டர் அளவில் 7.7 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர், ரிக்டர் அளவு 6.7 என்று மற்றொரு நிலநடுக்கம் பதிவானது.

அந்நாட்டை வெள்ளிக்கிழமை (மார்ச் 28ஆம் தேதி) அந்த நிலநடுக்கம் உலுக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றில் மியன்மாரில் மட்டும் 1,700க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் அண்டை நாடான தாய்லாந்தில் குறைந்தது 18 பேர் மாண்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றிக் கூறிய உலக சுகாதார நிறுவனம், மியன்மார் நிலநடுக்கத்தின் ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை, அதிர்ச்சி தரும் காயங்களுக்கு ஆளானோர் மிகவும் அதிகம் என்று அது விளக்கியுள்ளது.

இவர்களுக்கு உடனடி கவனிப்பு தேவை என்றும் அது கூறியது. மேலும், மின்சார இணைப்பு துண்டிப்பு, குடிநீர் விநியோக பாதிப்பு போன்றவை சுகாதார சேவையை பாதித்துள்ளதாகவும் அதனால் நீர் சார்ந்த, உணவு சார்ந்த நோய்ப் பரவல் அதிகரிக்கும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் அது விளக்கியது. “எலும்பு முறிவு, வெட்டுக் காயங்கள் போன்றவற்றால் நோய்ப் பரவல், அதனால் ஏற்படக்கூடிய சிக்கல்கள், குறைவான அறுவை சிகிச்சை வசதி, குறைவான நோய்ப் பரவல் தடுப்பு வசதி,” போன்றவை நிலைமையை மோசமாக்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கோடி காட்டியுள்ளது. இதனால், அடுத்த 30 நாள்களில் உயிர்களைக் காக்க, நோய்களைத் தடுக்க, அத்தியாவசியத் தேவைகளை நிலைப்படுத்த அமெரிக்க டாலர் எட்டு மில்லியன் உடனடியாகத் தேவைப்படுவதாக அந்நிறுவனம் தனது வேண்டுகோளில் விவரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்