கான்பெரா: அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வென்றாலும் அந்நாடு தன்னை மேலும் தனிமைப்படுத்திக்கொள்ளும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கருத்துரைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோது திரு ஜெய்சங்கர் ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அண்மைக் காலமாகவே காணப்படும் அமெரிக்காவின் போக்கை அதிபர் தேர்தல் மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று திரு ஜெய்சங்கர் கூறினார்.
“ஒபாமா (அதிபராக இருந்த) காலத்திலிருந்தே உலக விவகாரங்களில் தலையிடுவதன் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது,” என்றார் திரு ஜெய்சங்கர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தவணைக் காலத்தில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை மீட்டுக்கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
“இதன் தொடர்பில் திரு டிரம்ப் தனது கருத்துகளை மேலும் வெளிப்படையாகத் தெரிவிக்கக்கூடும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், உலக விவகாரங்களில் அமெரிக்காவின் ஆதிக்கம் முன்பைப் போல் இருக்காது என்றும் திரு ஜெய்சங்கர் கருத்துரைத்தார்.
“இதை உன்னிப்பாகக் கவனித்துப் பார்க்கும்போது, ஒரு காலத்தில் அமெரிக்காவுக்கு இருந்த ஆதிக்கமும் உலக விவகாரங்களில் தலையிடும் எண்ணமும் இனி தொடராது என்று நான் நினைக்கிறேன்,” என்று திரு ஜெய்சங்கர் சொன்னார்.