ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ரியாவ் தீவில் இருக்கும் பிந்தாம் வட்டாரத்தில் உள்ள காட்டிலும் நிலப்பகுதியிலும் தீ தொடர்ந்து அச்சுறுத்திவரும் நிலையில், அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம், அருகே உள்ள துமாய் நகரத்திலும் பெலாலாவான் வட்டாரத்திலும் நெருப்பை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை (மார்ச் 25) முதல் அடுத்த 14 நாள்களுக்கு பிந்தான் வட்டாரத்தில் காட்டுத்தீ காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெராகிட் கிராமத்தில் உள்ள தஞ்சோங் பினாங்கு - தஞ்சோங் ஊபான் நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மரங்களும் புல்வெளிகளும் தீயில் கருகி வருகின்றன.
தற்போது, தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், நிலப்பகுதிகள் கருகி கறுப்பாகக் காட்சியளிக்கின்றன; ஆங்காங்கே புகை மூட்டமும் காணப்படுகிறது. காட்டுத்தீச் சம்பவங்கள் திடீரென அதிகரித்ததைத் தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக பிந்தான் வட்டார ஆட்சியர் ரோபி குர்னியவான் தெரிவித்தார்.
மேலும், பிந்தான் வட்டாரத்தின் கிட்டத்தட்ட அனைத்துப் பகுதிகளிலும் காட்டுத்தீச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலும், கடுமையான வறட்சி நிலவுவதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நீண்டகாலமாக நிலவும் வறண்ட வானிலை, நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதுடன் பல்வேறு பகுதிகளில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

